குஜராதில் ஐ.எஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் (Gujarat ATS) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளது, எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைது செய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.
மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ஐ. எஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைதுசெய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
மாநிலத்திற்கு வெளியே இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதில் குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் விசாரணைகளின் மூலம் ஒஸ்மன்ட் ஜெராட் என்ற நபர் நான்கு சந்தேக நபர்களிற்கும் நான்கு இலட்சம் ரூபாய்களை வழங்கியமையும், இந்த நபர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றுவதும் தெரியவந்துள்ளது.
இலங்கை அதிகாரிகள் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் ஒஸ்மன்ட் ஜெராட் தலைமறைவாகியுள்ளார் என குஜராத்தின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது இந்தியாவில் சந்தேகநபர்களின் நடவடிக்கைகளுக்கு மேலும் மூவர் உதவியமை தெரியவந்துள்ளது.
,இந்நிலையில் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது இந்த நபர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.