சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட உமர் லெப்பை அமீர் அஜ்வத் தனது கடமைகளை ரியாத்தில் நேற்று உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இதன்போது இலங்கை தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத்,
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இலங்கை இராஜதந்திர சேவையில் 26 வருட அனுபவமுள்ள தூதுவர் அமீர் அஜ்வத் தொழில் இராஜதந்திரி ஆவார்.
அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், இருதரப்பு உடன்படிக்கைகள் உட்பட வெளிவிவகார அமைச்சின் திட்டமிடல், அமுலாக்கம் மற்றும் செயல்திறன் மீளாய்வுக்கு பொறுப்பான இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றினார்.
ஜாமியா நளீமியாவில் கற்று வெளியேறிய பட்டதாரியான இவர் முன்னர் ஓமானிற்கான இலங்கைத் தூதுவராகவும், சிங்கபூரிற்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு சேவையில் 1998ஆம் ஆண்டு இணைந்த இவரது முதலாவது வெளிநாட்டு பதவியினை றியாதிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேதிகமாக சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராலயம் போன்றவற்றிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.
மேலும் தூதுவர் அமீர் அஜ்வத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் (LL.M) பெற்றுள்ளதோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டத்தையும் (BA) கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தையும் (LL.B) பெற்றுள்ளார்.
அவர் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் கொள்கை அமலாக்கத்திற்கான தேசியக் குழுவின் (NCOLPI) உறுப்பினராகவும், வெளிவிவகார அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைக்கான இடம்பெயர்வுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் (NACME) உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை ஓமானில் மேற்கொண்ட பணியினை அடிப்படையாக வைத்து இலங்கை – ஓமான் உறவுகள் தொடர்பான நூலொன்றினையும் இவர் எழுதியுள்ளார்.
ஆங்கிலம், அரபு, சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.