ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு கபே அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கபே அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில், குறிப்பாக ஒரு ஜனநாயக அரசில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்துவது அவசியம்.
ஐ.தே.க பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதி பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற செயலாளரின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், அரசாங்கம் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தலை தன்னிச்சையாக ஒத்திவைத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்து, பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்து, அதற்காக கிட்டத்தட்ட 94 கோடி ரூபாவைச் செலவு செய்து, அதே தேர்தலை நடத்தாமல் ஜனநாயக விரோதமாகச் செயற்படுகிறது.
அதற்கிணங்க, அரசாங்கத்தின் அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த காலப்பகுதிக்குள் உரிய தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கஃபே அமைப்பு அன்பு கேட்டுக்கொள்கின்றது.