பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்தியாவின் அகமதாபாத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ATS) மே 20 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நுஷ்ரான், மொஹமட் நஃப்ரான் நவ்ஃபர், மொஹமட் ரஸ்டீன் அப்துல் ரசீம் மற்றும் மொஹமட் பாரிஸ் மொஹமட் ஃபாரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நால்வரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே ரஸ்தீன் மற்றும் பாரிஸ் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான அப்துல் ஹமீட் அமீர் என்பவரும் விசாரணைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மே 21 அன்று ஃபாரிஸ் மற்றும் அமீரின் வீடுகளில் சோதனைகளை நடத்திய போதிலும், குறிப்பிடத்தக்க அல்லது சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதேபோல், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளும் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உடனான தொடர்புகளின் எந்த முடிவையும் தரவில்லை.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று உள்ளூர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.