பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “காந்தாரத்திலிருந்து உலகிற்கு” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பௌத்தமத தூதுக்குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த தூதுக்குழுவில் இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வியட்நாமைச் சேர்ந்த மதிப்பிற்குரிய திச் டக் துவான் தேரர், தாய்லாந்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய அனில் சக்யா தேரர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த கலாநிதி கேஷப்மான் ஷக்யா ஆகியோர் அடங்குவர்.
தூதுக்குழுவை பிரதமர் அன்புடன் வரவேற்றதோடு புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் மரணத்தை நினைவுகூரும் ‘வெசாக் தினத்தையிட்டு நடைபெற்ற இக்கருத்தரங்கில் பங்கேற்றமைக்காக தனது நன்றியையும் தெரிவித்தார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காந்தார கலை மற்றும் கலாச்சார வடிவில் வடமேற்கு பாகிஸ்தானில் தழைத்தோங்கிய அதன் பண்டைய பௌத்த பாரம்பரியம் குறித்து பாகிஸ்தான் பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் எடுத்துரைத்தார்.
மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு தனது அரசாங்கம் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதோடு மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கான பௌத்த அறிஞர்களினதும் பிக்குகளினதும் பங்களிப்புகளையும் அவர் புகழ்ந்து பேசினார்.
அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை வளர்ப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை பௌத்த தலைவர்கள் பாராட்டியதோடு பௌத்த பாரம்பரிய தளங்கள் மற்றும் கலாச்சார கலைப்பொருட்களை பாதுகாத்து வைத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.
பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் பாகிஸ்தானுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது ஆர்வத்தை தூதுக்குழுவினர் இதன் போது வெளிப்படுத்தினர்.
இந்த சந்திப்பின் போது, பிரதமரும் தூதுக்குழுவினரும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், பாகிஸ்தான் மற்றும் பெளத்த பெரும்பான்மை நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் கல்வி பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.
பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வது மற்றும் அமைதியான உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவது என்ற தீர்மானத்துடன் இந்த சந்திப்பு முடிவடைந்தது.
மேலும் அதுதொடர்பாக, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றம் ஒன்றினை நிறுவுவதற்கான சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பாகிஸ்தான் சமய விவகார அமைச்சர் சாலிக் ஹுசேன், தகவல், ஒளிபரப்பு மற்றும் கலாச்சார பாரம்பரிய அமைச்சர் அதாஉல்லா தாரார், பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் ஃபதேமி ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.