ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய ஜனாதிபதியின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோர் இந்த விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், “விபத்து நடந்த இடத்தை அடைய மீட்புக் குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், எனிவும் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது உயிரிழப்புகள், அல்லது சம்பவத்திற்கான சரியான காரணம் மற்றும் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி முகமது பாகேரி, ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க இராணுவம், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் சட்ட அமலாக்கப் படைகளின் அனைத்து உபகரணங்களையும் திறன்களையும் பயன்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
மஷாத் என்ற நகரில் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.