சீன – அரபு நாடுகளுக்கான 10ஆவது ஒத்துழைப்பு மாநாடானது இன்றைய தினம் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமாகியது.
இந்த மாநாட்டில், பஹ்ரைன், துனிசியா, எகிப்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.
குறித்த மாநாடானது, சீனாவுடனான வர்த்தக நிலைமைகளை விரிவுபடுத்தவும் இஸ்ரேல் – ஹமாஸூக்கு இடையிலான போர் குறித்து கலந்துரையாடுவதற்காகவுமே நடைபெற்றது.
இந்நிலையில், சீனாவின் ஜனாதிபதியான சி ஜின்பிங் ஆரம்ப உரையை தொடங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், “ஒக்டோபர் மாதத்திலிருந்து இன்று வரையில் இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போரில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக சீனாவும் அரபு நாடுகளும் உள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஜின்பிங், இரு நாட்டு தீர்வுக்கு சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, காலவரையரையின்றி போர் தொடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதில் தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் காசாவுக்கு 574.48 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அகதிகளானவர்களுக்கு உதவி வழங்கும் ஐ.நா அமைப்புக்கு 24.97.73 கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கப்படும் என அவர் உறுதி கூறியுள்ளார்.
இந்த உரையாடலைத் தொடர்ந்து வர்த்தகம், விண்வெளி, எரிசக்தி, சுகாதார நலன் ஆகிய துறைகளின் ஒத்துழைப்பை இன்னும் பலப்படுத்துவதற்கு அரபு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சீன ஜனாதிபதி.
அரபு நாடுகளுடன் சேர்ந்து உயிர் ஆற்றல் கொண்ட புத்தாக்கம் வழங்கும் நிலைமையை கட்டியமைக்க சீனா விரும்புகிறது.
மேலும் பெரியளவில் முதலீடு மற்றும் நாணய ஒத்துழைப்பு அளவை அதிகரித்து, மேலும் செழுமையான எரியாற்றல் ஒத்துழைப்பு நிலைமையை விரிவாக்கி, மேலும் சமநிலையில் பொருளாதார வர்த்தகத் துறையில் கூட்டு நலன் தரும் நிலைமையை உருவாக்கி, மேலும் பெரியளவில் மானுட பண்பாட்டுப் பரிமாற்ற நிலைமையை முன்னேற்ற சீனா முயற்சி செய்யும் என்றார் அவர்.