வெலிகம மத்ரஸா தீ விபத்தில் சந்தேகம்: நள்ளிரவில் பார்வையிடச் சென்ற ஹக்கீம்

Date:

திங்கட்கிழமை (29 ) மாலை தென் மாகாணத்தில், வெலிகமையில் அமைந்துள்ள ஹப்ஸா மகளிர் அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து அங்கு கற்கும் மாணவிகள் சிலரது பெற்றோரும், அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அன்று நள்ளிரவு 12 மணியளவில் வெலிகமைக்குச் சென்று தீ பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் அரபிக் கல்லூரியை பார்வையிட்டதோடு, அங்கிருந்தவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்து கொண்டார்.

ஹப்ஸா பெண்கள் மகளிர் அரபிக் கல்லூரி கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி மாலையிலும் ஏறத்தாழ இதே நேரத்தில் தீப்பற்றி எரிந்ததாகவும் அதனால் மாணவிகளின் தங்குமிடமான அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடி இதேபோன்று தீப்பற்றிக் கொண்டதாகவும் அதனால் உயிர் சேதம் ஏற்படாவிட்டாலும் கூட, பாரிய உடைமை சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது பொலீசாரும் அதிகாரிகளும் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழ்ந்து இருப்பது அங்குள்ள மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை கிளப்பி இருப்பதாக கூறப்பட்டது .

இந்த அரபிக் கல்லூரியை அடுத்து அருகில் யூதர்களின் அமைவிடம் ஒன்று இருப்பதாகவும், அங்கு அவர்களது வழிபாடுகளும் நடப்பதாகவும், மேற்கு நாட்டு பிரஜைகளும், மத்திய கிழக்கில் யூதர்கள் குடியேறி வாழ்கின்ற நாட்டின் நபர்கள் சிலரும் அங்கு தங்குவதாகவும், வருகை தருவதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் மேற்கு நாட்டுப் பிரஜையொருவர் அங்கு தங்கியிருந்து இந்தப் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் தொடர்ந்தும் நடமாடி வருவதும்,அவரால் பறக்கவிடப்பட்டதாகக் கூறப்படும் ட்றோன், சம்பவத்தின் முன்னரும்,பின்னரும் அங்கு தென்பட்டதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் ஒன்று கூடுவதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் தான் யூதர்கள் பயன்படுத்துவதாக கூறப்படும் அண்மையில் உள்ள கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்று நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் பின்னணியில் மறைந்துள்ள மர்மம் துலங்காத புதிராக இருப்தையிட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த தீப்பரவல் சம்பவம் நடைபெற்ற 29 ஆம் தேதி திங்கட்கிழமை காலையிலிருந்து மாலை வரை இந்த பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தி ருக்கிறது அத்துடன் அன்று கல்லூரியின் மின் பிறப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மழையுடன் கூடிய காலநிலை நிலவியதன் காரணமாக அதிகளவு வெப்பம் காணப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில் இந்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டு இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்பது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பொழுது பாராளுமன்ற உறுப்பினருக்குத் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னணியில் பிரஸ்தாப மகளிர் அரபுக் கல்லூரியில் பயிலும் 120 மாணவிகளும் தத்தமது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அச்சமற்ற நிலையில் அவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

இவை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரிய கவனம் செலுத்தி வருகின்றார்.

கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி இதே அரபுக் கல்லூரியில் நடந்த தீ பரவல் சம்பவம் பற்றிய அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் வழங்கப்படாமை குறித்தும் அவர் விசனம் தெரிவித்தார்.

தென்மானத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் அந்தப் பகுதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு நடந்துள்ளவற்றை விளக்குவதாகவும் அவர் மேலும் கூறினார் .

அத்துடன், இந்த அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எம்.ஒ.பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி),மௌலவி எம் .ஏ. எம் லபர் (பஹ்ஜி) ஆகியோருடனும், ஊர் பிரமுகர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...