தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 6:00 மணிக்கு (0300 GMT) இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தொழிலாளர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும், மேலும் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டஜன் கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீயில் இருந்து புகையை சுவாசித்ததன் விளைவாக பலர் உயிரிழந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 43 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்திவிட்டதாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கட்டிடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.
குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரங்கல் தெரிவித்த இந்தியா: விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதில், 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்கள் தூதர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டிடத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆனால், கட்டிடத்தில் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Kuwait Mangaf Fire: Initial causes indicate poor storage on the ground floor and the presence of many gas cylinders, Firefighters, MOI and MOH to assess the deaths and injuries.. #الكويت pic.twitter.com/LNCpkhZdae
— Ayman Mat News (@AymanMatNews) June 12, 2024