நான்கு வயது சிறுமியை நபரொருவர் தாக்கிய சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த 20 வயது இளைஞருக்கு பொலிசார் சன்மானம் வழங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடக தளங்களில் வைரலான இந்த வீடியோ, சந்தேக நபரை கைது செய்வதிலும், சம்பவத்தை அம்பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தது.
‘குக்குல் சமிந்த’ எனப்படும் முனசிங்க கொடிகரலகே சமிந்த என்ற சந்தேகநபர் குழந்தைக்கு உணவளிக்கும் போது அவரை தாக்குவதை வீடியோவில் காணலாம்.
குறித்த சந்தேகநபர் சமிந்த தற்போது அனுராதபுரம் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான குழந்தை வடமேல் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முயற்சியினால் பொலிஸ் தலைமையகத்தில் வீடியோவை பதிவு செய்த தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞனுக்கு 5 லட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
இளைஞரின் துணிச்சலைப் பாராட்டியும் குழந்தைக் கொடுமையைத் தடுக்கும் பங்களிப்பைப் பாராட்டியும் இந்த சன்மானம் வழங்கப்பட்டது.
இதேவேளை இந்த கொடூர சம்பவத்தை அவர் சமூக ஊடகங்களில் வெளியிடாமல் இருந்திருந்தால், இந்த கொடுமை கட்டுக்கடங்காமல் தொடர்ந்திருக்கும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
சம்பத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் மற்றும் குழந்தையின் தாய் உட்பட மூன்று பெண்களை ஜூன் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.