இன்று மரணமான மூத்த ஒலிபரப்பாளர் மர்ஹூம் மஹ்ரூப் முஹிதீன் குறித்து கலாநிதி ரவூப் செய்னின் அருமையான பதிவு..!
தோராயமாக கால்நூற்றாண்டு உறவு அவருக்கும் எனக்கும் இடையிலானது. அது இனிமையானது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைபேசி ஊடாக உரையாடினேன்.
இந்த நாட்களில் SLBC பக்கம் செல்லவில்லை என்பதால் அவரை நேரடியாகக் கண்டு கன காலமாகிறதே என்ற ஆதங்கத்தில் தான் தொலைபேசியில் அழைத்தேன்.
மற்றொன்று முஸ்லிம் சேவையில் அவருடன் இணைந்து செய்த “கருத்துக்களம்” நிகழ்ச்சிகள் குறித்து முகநூலில் எழுத ஆரம்பித்த இந்த நாட்களிலேயே அவர் நம்மை விட்டும் சடுதியாக மறைந்து விட்டார்.
ஆர்ப்பாட்டமில்லாதவர். விளம்பர வெளிச்சத்தில் நனையும் ஆர்வம் அவரிடம் மிக அரிது. கொழும்பில் இடம்பெற்ற எனது நூல் வெளியீட்டு விழாக்கள் எல்லாவற்றுக்கும் போல் அறிவிப்பாளராக அவரை நான் அழைத்துள்ளேன்.
முஸ்லிம் உலக விவகாரங்களிலும் முஸ்லிம் உம்மாவின் விவாகாரங்களிலும் ஆழ்ந்த அக்கறையும் அனுதாபமும் கவனமும் அவருக்கிருந்ததை நான் அருகிலிருந்து அவதானித்திருக்கிறேன்.
எல்லாமே அவரது விருப்பமாக இருந்தது. செச்னியா பொஸ்னியா கொசோவோ என்று என்னைத்துளைத்தெடுத்தவர் அவர். அவ்வளவு ஆர்வமிகுதி அவருக்கு.
நல்ல பண்பாடும் (cultured) ஒழுங்குக் கட்டுப்பாடும் (diciplined ) மிகுந்த நண்பர் மஹ்ரூப் முஹிதீன் அடுத்தவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். ஹமீத் அல்ஹுஸைனியின் பழைய மாணவர். நாளிர் சேர் பேன்றோரின் மாணவர்.2005 இல் நடந்த என் திருமணத்திற்கு அன்பளிப்பு டன் வந்து என்னை கௌரவப் படுத்தியவர்.
சிறந்த மார்க்கத்தெளிவுடனும் பற்றுடனும் வாழ்ந்து மரணித்த அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவரது மறுமை வாழ்வை ஜெயம் பெறச்செய்வானாக.