அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் குற்றவாளி; அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

சட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கியது தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இப்போது பைடன் பதவி வகித்து  வருகிறார். அங்கு இந்தாண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில், பைடனுக்கும் டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனால் இரு தரப்பும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தச் சூழலில், சட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கியது தொடர்பான மூன்று வழக்குகளிலும் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரைத் துப்பாக்கி வாங்க நமது நாட்டை போலக் கட்டுப்பாடுகள் இல்லை. 18 வயதைக் கடந்தவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமாகவே கடைகளில் சென்று துப்பாக்கிகளை வாங்கலாம்.

அப்போது ஒரு விண்ணப்பத்தை மட்டும் அவர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில் போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட சில கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டு இருக்கும்.

அமெரிக்க அதிபரின் மகனான ஹண்டர் பைடன் கடந்த 2018 இல் அங்குத் துப்பாக்கியை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பமே அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

கடந்த 2018இல், ஹண்டர் பைடன் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப் பொருளைப் பயன்படுத்தி இருக்கிறார். இந்த துப்பாக்கியை அவர் சுமார் 11 நாட்கள் தன்வசம் வைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாகவே அவர் மீது கடந்த 2023 செப். மாதம் வழக்குகள் தொடரப்பட்டன. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப் பொருள் பயன்படுத்தும் போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்ட நிலையில், மூன்றிலும் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சுமார் 12 ஜூரிக்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதன் இறுதியிலேயே அவர்கள் ஹண்டர் பைடன் குற்றவாளி என முடிவெடுத்தனர்.

இதில் முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாட்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு  நடக்கும் நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படும். அமெரிக்க அதிபரின் மகன் ஒருவன் குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...