முஹம்மத் பகீஹுத்தீன் அவர்களுடைய வாழ்த்துச்செய்தி!
ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டின் நுழைவாயிலில் உள்ளோம். நாளை திங்கட்கிழமை முஹர்ரம் புத்தாண்டு பிறக்கிறது. அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய முஹர்ரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
வாழ்க்கை ஒரு சோதனைக் களம் என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் தெளிவான செய்தி. பரீட்சை முடிய முன்பு திட்டமிட்டு மிகச்சரியாகவும் மிக அழகாகவும் செயற்பட அது தூண்டுகிறது.
ஓவ்வொரு ஆத்தமாவும் நாளைய நிரந்தர வாழ்விற்காக முன்கூட்டியே என்ன சமர்ப்பித்துள்ளது என்பதை நோக்கட்டும் என இறை மறை அல்குர்ஆன் போதிக்கின்றது.
உலகில் வாழும்போது நிஜமான மறுமை வாழ்விற்காக மிக நல்ல அமல்களை, மரணித்த பின்னரும் நன்மை தரும் ஸதகா ஜாரியா எனப்படும் நிலையான தர்மங்களை அனுப்பிவைக்கவேண்டியுள்ளது.
இது திட்டமிடலை வேண்டி நிற்கின்ற ஒரு விடயம். இறை தூதரின் ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்ட இலக்கு நோக்கிய பயணமாகவே காணப்பட்டது.
எனவே எமது மறுமை வாழ்வுக்காக திட்டமிட்டு செயற்படுவோம்.
வாழ்கை என்பது சில நாட்கள். ஒரு நாள் கழியும்போது உன்னில் ஒரு பகுதி நீங்கிவிடுகிறது. நீ ஒரு எட்டு முன்னெடுத்து வைக்கும்போது புதைகுழியை நோக்கி நெருங்குகிறாய்.
இந்த ஆண்டின் இறுதி நாட்கள் நற்செயல்களுடன் முடிவடைவது எவ்வளவு நல்லது! அடுத்த ஆண்டின் ஆரம்பம் இறைவழிபாடுகளுடன் துவங்குவது எவ்வளவு அழகானது!
மலர்ந்தும் மலராத இந்த வாழ்வு நிறைவேறாத ஆசைகளுடன் பாதியிலே வாடிவிடும். ஆனால் ஆன்மா மரணிப்பதில்லை. அது மீண்டும் மண்ணறையில் இருந்து எழுந்து வரும். விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுது அல்லது மறைந்தும் மறையாத ஒரு மாலைப் பொழுது தான் வாழ்ந்தோம் என்று கூறும். இது தான் சத்தியம். இந்த குறுகிய உலக வாழ்வு சோசம் நிறைந்ததாகவே இருக்கும். இந்த உண்மையை புரிந்து கொள்வோம். அதில் வசந்தத்திற்கான பாதையை அமைத்துக் கொள்வதே மனித வாழ்வின் திட்டமாக அமைய வேண்டும்.
இறுதியாக இஸ்லாம் ஒரு கொள்கை. அதை பின்பற்றுவதால் கிடைப்பது சாந்தி, அமைதி, நிம்மதியான வாழ்வு. வரலாறு அதற்கு சான்று. மனித நாகரிகங்கள் இந்த உண்மையை கண்கூடாகக் கண்டன.
அன்று போன்று இன்றும் சாந்தி வழிக்கு வேராக இருக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரிகள் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் இஸ்லாம் என்றால் அதன் மறுபெயர் பயங்கரவாதம் என்று ஊடகங்கள் மூலம் அச்சத்தையும் பயத்தையும் மக்கள் மத்தியில் திணித்துள்ளனர்.
அது சுத்தப் பொய் என்று பறைசாற்றிக் கெண்டு முஹர்ரம் புத்தாண்டு பிறக்கிறது. ஆம் முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கும். சாந்தி சமாதானம் நிலவும்.
அனைவருக்கும் இதயங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!