புத்தளத்து மக்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் கையேந்தும் நிலையை மாற்றி தங்களுக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அரசியலில் கால் பதித்தது.
இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் புத்தளத்தில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் எழுச்சி மாநாடு நேற்றைய தினம் மாலை புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதி தலைவர்களில் ஒருவருமான எம். எச். எம் நவவி தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் கட்சியின் தவிசாளர், முன்னாள் பிரதி அமைச்சர் எம். எஸ் .எஸ். அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான எம். எச். எம் மஹரூப், கட்சியின் சட்ட விவகார ஆலோசகர் சட்டத்தரணி ஹபீப், உள்ளிட்ட அதிஉயர் பீட உறுப்பினர்களும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.
ரிஷாட் பதியுதின் மேலும் உரையாற்றுகையில்,
இம் மாநாட்டை புத்தளம் நகர மண்டபத்தில் நடத்துவதற்கே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்களை அச்சுறுத்தி அந்த மாநாட்டை நடத்துவதற்கு கூட எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை சிலர் மேற்கொண்டனர்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் எமது கட்சியின் வளர்ச்சியையும் செயற்பாடுகளையும் தடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என்று புத்தளம் மாவட்ட கட்சியின் அரசியல் குழுவினர் சுட்டிக்காட்டி இதனை புத்தளம் கொழும்பு முகத் திடலில் ஒரு பாரிய மாநாடாக நடத்துவதற்கு முன் வந்த்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்திருக்கின்ற நிலையில் எமது கட்சிக்கு பல தரப்புகளில் இருந்தும் அழைப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்ற இந்த வேளையில், இவ்வாறான ஒரு மக்கள் வெள்ளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பலத்தை வெளிப்படுத்தியுள்ளதை இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூறுவது பொருத்தமாகும்.
குறிப்பாக 2001 ஆம் ஆண்டு முதல் நாம் அரசியல் களத்தில் இருந்த பொழுதும் கூட புத்தள வாக்குகளை சிதறடிக்கக் கூடாது என்பதற்காக நாம் மௌனமாக இருந்தோம்.
மர்ஹூம் பிஷ்ருல் ஹாபி, நவவி அதே போன்று மர்ஹூம் பாயிஸ் ஆகியோர் தேர்தல்களில் போட்டியிடுகின்ற பொழுது வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை வென்றெடுக்க முடியாமல் போன சந்தர்ப்பங்களை பார்த்தோம். அதன் பிற்பாடு 2015 ஆம் ஆண்டு நாம் புத்தளம் அரசியலில் கால் பதிக்க துவங்கினோம்.
இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அல்லாது வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் வந்த பொழுது மக்கள் எமக்களித்த ஆதரவினையும் அரவணைப்பையும் மறக்காது அதற்கான நன்றிக்கடனாகவே நாம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே நாம் செயற்பட்டோம்.
32 வருடம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் அரசியல் ரீதியில் பிரிந்து நின்ற எமது இந்த சமூகத்துக்கு ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்றத்தை எமது கட்சியும் பெற்றுக் கொடுத்தது.
இது தொடர்பில் எமது கட்சிக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் வந்த பொழுதும் புத்தளம் சமூகத்துக்கு அது வழங்கப்பட வேண்டும் என்ற ஒரே கொள்கையோடும் நோக்கத்தோடும் தலைமைத்துவம் செயற்பட்டதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று புத்தளத்தில் பலம் பெற்று வருகிறது,
கடந்த தேர்தலில் 56 ஆயிரம் வாக்குகளை பெற்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.ஆனால் எதிர்வரும் தேர்தலில் 66,000 வாக்குகளை பெற்று இரு பாராளுமன்ற உறுப்பினர்களை புத்தளம் சமூகம் வரப்போகிறது என்கின்ற செய்தியை இன்று நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்று பிரிந்து நின்றும் பிரதேசவாதம் பேசியும் பிளவுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்தவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.
புத்தளம் சமூகத்தின் இந்த எதிர்காலத்திற்காக உங்களது கருத்து முரண்பாடுகள் எல்லாவற்றையும் வீசிவிட்டு எங்களோடு வந்து இணைந்து கொள்ளுங்கள்! உங்களை அரவணைப்பதற்கு நாங்கள் காத்திருக்கின்றோம்.
ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தை மிகவும் மோசமாக பார்ப்பதற்கு காரணமாக இருந்த தங்கக் கடத்தலுடன் தொடர்புபட்ட அந்த பாராளுமன்ற உறுப்பினரை தவிர வேறு எவரையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரவணைத்துச் செல்வதற்கு தயாராக இருக்கிறது.
அவருக்கு எமது கட்சியில் எந்த இடமும் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என்பதை இந்த புத்தளம் மண்ணில் இருந்து பகிரங்கமாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.