ஜூன் 30ஆம் திகதி கொழும்பில் இருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட புகையிரதத்தின் சாரதியின் முறைகேடு தொடர்பில் இலங்கை ரயில்வே திணைக்கள மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த ரயில் சாரதி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் புகையிரதம் பயணத்தை ஆரம்பித்த வேளை இயந்திர சாரதி அதிக போதையில் இருந்ததாகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாரதி கண்டிக்கு அருகிலுள்ள சுதும்பொல பகுதியில் ரயிலை நிறுத்தி விட்டு செல்ல முற்பட்ட போது பயணிகள் அவரை துரத்திச் சென்று மீண்டும் ரயிலில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
உதவி இயந்திர சாரதி பின்னர் கண்டி ரயில் நிலையம் வரை ரயிலை இயக்கியதாகவும் போதையில் இருந்த என்ஜின் ஓட்டுநரை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதையில் இருந்த இயந்திர சாரதியின் நடவடிக்கையால் கண்டி ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.40க்கு வரவிருந்த புகையிரதம் 2.30 மணியளவிலேயே சென்றடைந்துள்ளது.
இது குறித்த முறைப்பாட்டின் அடிப்படியில் ரயில் திணைக்களம் சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.