விசா நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கம் நடத்தி வரும் செயற்பாடுகளினூடாக மாபெரும் கொள்ளையொன்று நடப்பதாக அரச நிதிக்குழு அங்கத்தவர்கள் இன்று நடாத்திய ஊடக மாநாட்டில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அரச நிதிக்குழுவில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசியலமைப்பின் 7ஆம் மற்றும் 126ஆம் உறுப்புரிமையின் கீழ் இலங்கை நீதிமன்றத்தில் தனித்தனியாக 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் இம்மூவரும் இன்று நடாத்திய ஊடக மாநாட்டில் இந்த திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த தொகையானது மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தொகையை விட 100 மடங்கு அதிகமானதாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதல்தடவையாக இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் வெளி வளத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எலக்ரோனிக் விசா (Electronic visa) நடைமுறைகளுக்கான செயற்பாடுகள் ‘ஐ.வி.எஸ் குளோபல்’ எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் வெறுமனே பெட்டிக்கடை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த நிறுவனத்திற்கு விசா நடைமுறைகளை வழங்குவதன் மூலம் 825 பில்லியன் ரூபா நாட்டுக்கு சொந்தமான வருமானம் இழக்கப்படப்போவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்தத் தொகை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கடனை அடைப்பதற்கான போதுமான நிதியாக இருப்பதாகவும் இந்த நிதி அனைத்தும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமைச்சரவையின் ஒப்புதலுடன் இதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த கொள்ளைக்கு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினர்.
இந்த செயற்பாட்டினால் இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த ஜுன் மாதம் முடியும் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 60 வீதமாக குறைந்துள்ளதாகவும் அவர்கள் தரவுகள் மூலம் சுட்டிக்காட்டினர்.
இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தரவுகள் அனைத்தும் அந்த குறித்த நிறுவனத்தில் பதிவு செய்யப்படும் என்ற நிபந்தனையின் கீழ் இருப்பதனால் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான அச்சத்தையே இது காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் சேகரிப்புக்கான சேவர் துபாயில் இருக்கின்றது. இதன்மூலம் நாட்டினுடைய அனைத்து தகவலும் வெளியாளருக்கு செல்லும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
இந்த விடயம் தொடர்பில் தாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.