தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (28) நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையுடன் கலந்துகொண்டமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் வகையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, பொதுமக்களின் வரிப் பணத்தினால் வழங்கப்படும் சீருடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நிறுவனங்களின் சட்டவிதிகளையும் தேர்தல் சட்டத்தையும் மீறும் செயலாகும் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) இடம்பெற்றுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.