2024ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இரத்தினபுரி அல் – மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் இன்று இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மௌலவிமார்களின் பங்கேற்போடு நடைபெற்றது.
பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் தேசிய மீலாதுன் நபி விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றது.
இக்கலந்துரையாடலுக்கு பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.குமாரி, இரத்தினபுரி மேலதிக மாவட்ட செயலாளர் கயானி ஐ. கருணாரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் அமில விஜேரத்ன, புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அசங்க ரத்நாயக்க, முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹமட், என். நிலூபர், அரச அதிகாரிகள் உட்பட முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.