ஃபிபா உலகக் கோப்பை 2022 இன் தொடக்க விழாவின் போது புனித குர்ஆனின் வசனங்களை ஓதி உலக அளவில் பிரபலமான இளைஞர் கானிம் அல்-முஃப்தா பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றார்.
20 வயதான கானிம் அல் முஃப்தா ‘Caudal Regression Syndrome’ எனப்படும் மரபு ரீதியிலான குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.
உடலில் குறைபாடு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தான் விரும்பிய துறைகளில் முன்னேறியதால் அவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரபலமாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரை பல இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இளம் தொழில்முனைவோரான அவர், ‘காரிஸா’ என்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். இன்று ஆறு கிளைகள் மற்றும் 60 பணியாளர்களுடன், இந்நிறுவனம் வெளிநாடுகளிலும் வளைகுடா முழுவதும் விரிவடைந்துள்ளது.
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையளிக்கும் உரைகளை நிகழ்த்துகிறார். ஸ்கூபா டைவிங், கால்பந்து, ஹைகிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் உள்ளிட்ட பல்வேறு தீவிர விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
எதிர்காலத்தில் இராஜதந்திரியாக வர வேண்டும் என்ற இலட்சியத்துடன் அரசியல் விஞ்ஞானத்தில் தனது கல்லூரிப் பட்டப்படிப்பைத் முடித்துள்ளார்.