இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாததொன்று என அமேசான் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசியலில் அனுபவரீதியான அரசியல்வாதி மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும் துணிந்து தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒருவராக இருந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.
இலங்கை அரசியலிலும் தமிழ் மக்களின் அரசியலிலும் குறிப்பாக இரா சம்பந்தன் என்கின்ற பெயர் மிகவும் பிரபலமான தொன்று, அவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் துணிந்து எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடிய திறமை கொண்ட ஒருவராக இருந்துள்ளார்.
அன்னாரது இழப்பு தமிழ் மக்களது அரசியலுக்கு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்ட அவர் அவரது இழப்பால் வேதனையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டார்.