ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான்
தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
அவருடன் அவருடைய மெய்காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார் என ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்திருக்கிறது.
அதாவது இஸ்மாயில் ஹனியே கடந்த 2017 முதல் ஹமாஸின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவராக பணியாற்றி வந்திருக்கிறார்.
இவர் மீது கடந்த 2004ம் ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. வீட்டில் இருக்கும் நேரமாக பார்த்து இவரது வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் இந்த தாக்குதலில் அவர் உயிர் பிழைத்துவிட்டார். அதேபோல 2019ம் ஆண்டு காசாவில் இவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது அவர் அலுவலகத்தில் இல்லை. எனவே உயிர் பிழைத்துக்கொண்டார். இருப்பினும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கிறார்.
ஈரானில் புதிய ஜனாதிபதி பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இஸ்மாயில் வந்திருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் இஸ்மாயில் மற்றும் அவருடைய மெய்பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை ஹமாஸ் உறுதி செய்திருக்கிறது.
இந்த கொலை தொடர்பாக ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “நமது தலைவர் முஜாஹித் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக பலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய ஈரானிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேலின் துரோகிகளால் நமது தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்” என தெரிவித்திருக்கிறது.
அதேநேரம் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இந்த தாக்குதல் பலஸ்தீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது கொல்லப்பட்ட இஸ்மாயில், வெறுமென ஹமாஸ் தலைவராக மட்டும் இல்லாமல், பேச்சுவார்த்தை நடத்தும் தூதராகவும் காசா மக்களால் பார்க்கப்பட்டு வந்திருக்கிறார்.
இவர் எடுத்த முன்னெடுப்புகள் மூலம காசாவில் போர் முடிவுறும் என்று நம்பியிருந்தனர். மற்ற ஹமாஸ் தலைவர்களை போல அல்லாமல், இஸ்மாயில் ஒரு மிதவாத தலைவராக காசா மக்களால் பார்க்கப்பட்டு வந்தார்.
இவர் வாழ்க்கை அகதிகள் முகாமிலிருந்துதான் தொடங்கியது. இப்படி இருக்கையில் இவருடைய படுகொலை மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது சர்வதேச அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் தயாராகி வந்தது. இப்படி இருக்கையில் இந்த படுகொலை போரை மேலும் கோரமாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அதரவு அமைப்பான ஹிஸ்புல்லா தலைவர் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டிருப்பது இஸ்ரேல் பலஸ்தீன போரை தீவிரப்படுத்தியிருக்கிறது.