கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல்

Date:

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என  கொழும்பில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன.

தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு – தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால்  செவ்வாய்கிழமை கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் ‘மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ‘தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்’, ‘இனப்படுகொலைக்கு நீதி வழங்கு’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதனைத்தொடர்ந்து நினைவுகூரலில் கலந்துகொண்டவர்கள் அச்சுற்றுவட்டத்தில் உள்ள நினைவுக்கல்லில் மெழுகுதிரிகள் மற்றும் விளக்குகளை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், பின்னர் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...