ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேல்’ என்ற சொற்றொடருக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் என்ற சொற்றொடரை இணைக்க அதிபர் யோசனை முன்வைத்திருந்தார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளது என சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு கடந்த (08) ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.