ஆக்கம்:எம்.எல்.எம்.மன்சூர்
மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த கலகொட அத்தே ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கின்றது.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதத்தில் பௌத்த மத பீடங்களினால் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பாக முஸ்லிம் சமூகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கடும் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வந்ததை நாங்கள் பார்த்தோம்.
இந்த விடயம் தொடர்பாக ACJU மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில், ‘இந்த விவகாரத்தில் ACJU எந்த விதத்திலும் தலையிட மாட்டாது’ என்ற உத்தரவாதத்துடன் ஓர் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டதட்ட ஒரு வார காலத்திற்குள் யாரும் எதிர்பாராத விதத்தில் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது.
அதனையடுத்து, இந்த விவகாரம் சிங்கள சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய பேசு பொருளாக எழுச்சியடைந்துள்ளது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை தொடர்பாக முஸ்லிம் சமூகம் எடுத்திருக்கும் கடுமையான நிலைப்பாட்டை அறியாத நிலையில், பல முன்னணி சிங்கள சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முஸ்லிம்கள் இது தொடர்பாக நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை பின்பற்ற வேண்டுமென வேண்டுகோள்களை விடுத்திருக்கிறார்கள்.
‘இந்தப் பிரச்சினையை ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணோட்டங்களில் அணுக முடியும்’ என்ற விடயத்தை முஸ்லிம் சமூகம் கருத்தில் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட குற்றம் இழைக்கப்பட்ட கால கட்டத்தில் – அதாவது, 2016 ஆம் ஆண்டில் – இலங்கையில் நிலவி வந்த சமூக, அரசியல் நிலவரங்கள் 2024 இல் தலைகீழாக மாற்றமடைந்திருப்பதனை அது கவனத்தில் எடுக்கத் தவறியிருந்தது.
முதன்மையான நான்கு சிங்கள சமூக ஊடக பிரபலங்கள் – சேபால் அமரசிங்க, தரிந்து உடுவரகெதர, ஓஷல ஹேரத் மற்றும் சமிந்த குணசிங்க ஆகியோர் – ஞானசார தேரர் விவகாரத்தை முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் அணுகி, தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எமது கவனத்திற்கும் . பரிசீலனைக்கும் உரியவை.
ஞானசார தேரர் பதற்றங்கள் சூழ்ந்த இலங்கையின் இனத்துவ அரசியலில் ஒரு முதன்மை சக்தியாக (Key Player) தீவிரமாக செயற்பட்டு வந்த பொழுது மேற்படி நால்வரும் அவரை கடுமையாக எதிர்த்தவர்கள்.
அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்கள். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலப் பிரிவின் போது இலங்கையில் இன, மத நல்லிணக்கத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து குரலெழுப்பி வந்திருப்பவர்கள். ஆகவே, அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது.
பிரபல யூடியூப் பரப்புரையாளர் சேபால் அமரசிங்க –
” ஞானசார தேரர் 2012 இல் திடீரெனத் தோன்றி இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்த பொழுது முதன் முதலில் அவருக்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் நானும் ஒருவன்.
2012 இல் No Limit நிறுவனத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது ‘பப்பராசி’ சஞ்சிகையில் “மச்சான், ஞானசார” எனத் தலைப்பிட்டு நான் எழுதிய கட்டுரையில் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தேன். முஸ்லிம் ஒருவர் அச்சந்தர்ப்பத்தில் அவ்வாறு எழுதியிருந்தால் அனேகமாக கொலை செய்யப்பட்டிருக்க கூட முடியும்………. அதனையடுத்து, CID அலுவலகத்தின் நான்காவது மாடியில் விசாரணைகளுக்கென அலைக்கழிய வேண்டிய நிலையும் எனக்கு ஏற்பட்டது”.
“ஆனால், இன்றைய இலங்கை சமூகத்தில் ஞானசார தேரருக்கு எந்த இடமும் இல்லை. இனிமேல் அவருடைய சண்டித்தனம் எடுப்படப் போவதில்லை. சில வருடங்களுக்கு முன்னர் ‘சங்க ரஜு’ (பிக்குகளின் அரசர்) என ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் அவரைக் கொண்டாடியது.
இப்பொழுது எல்லோரும் அவரைக் கைவிட்டிருக்கிறார்கள். அவரைத் தூண்டி, அவருடைய செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பக்கபலமாக இருந்த பலர் இப்பொழுது இனவாதத்தை எதிர்க்கும் முகாமில் இருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியிலேயே, அண்மையில் ஞானசார தேரர் என்னுடன் தொடர்பு கொண்டு தான் கடும் மன விரக்தியில் இருந்து வருவதாக சொன்னார்.”
“ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சி. அவருக்கு பொது மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் தலையிட வேண்டும் என நான் முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.”
அரசியல் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத்,
‘நான் ராஜபக்சகளுக்கு சார்பாக ஒரு யூடியூப் தளத்தை நடத்தி வந்தாலும் கூட, 2014 அளுத்கம வன்முறையின் போது முஸ்லிம்களின் பக்கத்தையே எடுத்தேன்..
2020 இல் கட்டாய ஜனாஸா எரிப்பு ஒழுங்குவிதிகள் அமுல் செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் விடுப்பதற்கு முஸ்லிம்கள் தயங்கினார்கள். அச்சந்தர்ப்பத்தில் (ஒரு கத்தோலிக்கர் என்ற முறையில்) நானே இது தொடர்பான முதலாவது வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
அதன் பின்னர் முஸ்லிம்கள் தரப்பில் பலர் வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள்.” அச்சந்தர்ப்பத்தில், ஜனாஸா எரிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்த முதலாவது பிக்கு ஞானசார தேரர்.
முஸ்லிம்கள் தொடர்பான அவரது அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்த கால கட்டம் அது. சவூதி அரேபிய தூதுவராலய நிகழ்வுகளில் அவர் பங்கேற்றமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.”
“ஆனால், 2016 இல் அவர் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை கடுமையாக புண்படுத்தும் விதத்தில் பேசிய வார்த்தைகளை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமான விதத்தில் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, இப்பொழுது கைவிட்டிருக்கிறார்கள். ‘அவர் பேசியதில் தவறில்லை’ என ஒரு போதும் சொல்ல மாட்டேன்.
நிச்சயமாக அது ஒரு குற்றச்செயல் ஆனால், அதற்கான மன்னிப்பை பாதிக்கப்பட்ட தரப்பே (Aggrieved Party) முதலில் வழங்க வேண்டுமென்பதே எனது கருத்து.”
சிவில் சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர –
“2014 தர்கா நகர் வன்செயல்கள் தொடர்பாக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ( பிணை மறுக்கப்பட்டு), அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ICCPR ஐ பயன்படுத்தி இனவாதம் மற்றும் பாசிசம் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து, அவருக்குத் தண்டனை வழங்கியிருக்க முடியும். ஆனால், கோட்டாபயவும், மஹிந்தவும் அதனைச் செய்யவில்லை.
“இனவாத தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே முஸ்லிம் மக்கள் 2015 இல் பெருமளவுக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்தார்கள்.
ஆனால், அவர் பிரதம மந்திரியாக இருந்த 2015 – 2019 காலப்பிரிவிலும் கூட தர்கா நகர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. அந்த அரசாங்கத்தின் காலத்திலும் ஞானசார தேரர் திகன வன்முறையையும் உள்ளிட்ட பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவர் ஒரு போதும் கைது செய்யப்படவில்லை.”
“அச்சந்தர்ப்பங்களை கை நழுவ விட்டு விட்டு, தற்பொழுது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.”
“Gune Aiyage Kamare” என்ற பிரபல யூடியூப் தளத்தை நடத்தி வரும் சமிந்த குணசிங்க இந்த விடயத்தை முற்றிலும் வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்தில் நோக்குகிறார் –
“மத நிந்தளை குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது.
மகிழ்ச்சி. நீதிமன்றங்கள் எப்பொழுதும் நாம் விரும்பும் தீர்ப்புகளை மட்டுமே வழங்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. அவை நாம் விரும்பாத தீர்ப்புகளை வழங்கினாலும் சட்டத்தை மதிக்கும் பிரஜைகள் என்ற முறையில் அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்”.
“அவர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் நமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன என்பதை வைத்தே இப்பிரச்சினையை நாங்கள் அணுக வேண்டும்”.
“ஞானசார தேரர் இப்பொழுது வெளியில் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. டாண் பிரியசாத், நாமல்குமார மற்றும் அத்துரலியே, ரதன தேரர் போன்றவர்கள் இலங்கையில் விதைத்து, நீரூற்றி வளர்க்க முயன்ற கருத்தியல் இப்பொழுது முற்றிலும் மதிப்பிழந்து, செல்லாக்காசாக போயிருக்கிறது. அவர் சிறைக்குள் இருந்தால் அதனைப் பார்க்க முடியாது; வெளியில் வந்தால் மட்டுமே பார்க்க முடியும்”.
“சுருக்கமாக சொன்னால் ஞானசார தேரர், ரதன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அழுகி, உளுத்துப் போயிருந்த மண்ணில் நெளிந்து கொண்டிருந்த புழுக்கள்.
சமூகம் இப்பொழுது இன, மத, வர்க்க பேதங்களை மறந்து, ஒன்றாக இணைந்து அந்த அழுகிய மண்ணை மிகவும் வேகமாக துப்புரவு செய்து கொண்டிருக்கின்றது. அதனைப் போஷித்து வளர்த்த அரசியல் தலைவர்களும் இப்பொழுது வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் இலாபங்களுக்காக வெளிப்படையாக இனவாதத்தையும், மதவாதத்தையும் பயன்படுத்திக் கொண்ட பல அரசியல்வாதிகளும் கூட இப்பொழுது மேடைகளில் தோன்றி “நாங்கள் இனவாதிகள் அல்ல” என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது”.
“தனது கருத்துக்களுக்கு இன்றைய சமூகத்தில் துளியும் மதிப்பில்லை என்பதை ஞானசார தேரர் நேரில் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒரு சமூகம் என்ற முறையில் நாங்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரித்து வெகு தூரம் வந்திருக்கிறோம்.
ஞானசார தேரரை சிறையில் அடைத்து வைத்திருப்பதிலும் பார்க்க, ஒரு சுதந்திர மனிதராக உலவ விட்டு, சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பார்ப்பதற்கான வாய்ப்பை அளிப்பதே அவருக்கு நாங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய தண்டனை.”
“ஞானசார தேரர், ரதன தேரர், வீரவன்ச, கம்மன்பில ஆகியோரை உள்ளிட்ட இனவாத கும்பலுக்கு மீண்டும் சொல்கிறோம்:
‘நீங்கள் விளையாடிய மைதானத்தை நாங்கள் முழுவதும் சுத்தப்படுத்தியிருக்கிறோம். இனிமேலும் இந்த மைதானத்தில் நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடர முடியாது.’
“சமூகம் என்ற முறையில் எம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. நீங்கள் சிங்களவராக, தமிழராக, முஸ்லிமாக எவராகவும் இருக்கலாம். யுன்பி, ஜேவிபி, எஸ்ஜேபி, SLPP, ஏதாவது ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
ஆனால், இனிமேல் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பும் விதத்தில் ஒருபோதும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்ற பிரதிக்ஞையை நாங்கள் அனைவரும் செய்து கொள்வோம். அந்தக் கும்பலுக்கு நாங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய தண்டனை அதுதான்.”
இந்த வேண்டுகோள்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பதிலளிக்க வேண்டுமா? யார், என்ன பதிலை அளிப்பது. ACJUவா? அல்லது வேறு ஏதேனும் சிவில் சமூக அமைப்பா? அரசியல்வாதிகளா?
அடுத்த தேர்தலை மட்டுமே குறி வைத்துச் செயற்பட்டு வரும் நபர்களினால் அடுத்து வரும் தலைமுறைகளின் வாழ்வின் மீதும் தாக்கங்களை எடுத்து வரக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ள முடியுமா?