உலகின் 7-ம் நிலையில் உள்ள துனீசிய டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜாபெர் (Ons Jabeur) மகளிர் டென்னிஸ் சங்கத்தின் கான்கன் இறுதிப் போட்டியில் வென்ற நிலையில், அந்தப் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை பலஸ்தீன மக்களுக்கு வழங்குவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார்.
மார்கேட்டா வோன்ட்ரோசோவாவை நேர் செட்டுகளில் தோற்கடித்து அவர், உணர்ச்சிப் பொங்க ஊடகவியலாளலரிடம் பேசுகையில்,
“இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நிஜமாக நான் மகிழ்ச்சியாக இல்லை. இந்த உலகத்தின் தற்போதைய நிலைமை எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை” என்றவர் உடைந்து கண்ணீர் உதிர்த்தார்.
பின்னர் தன்னைத் தேற்றிக்கொண்ட ஜாபெர், காசா போர் பற்றி பேசத் தொடங்கினார்.
“பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் தினமும் மரணமடைவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாகவும் இதயத்தை நொறுக்குவதாகவும் இருக்கிறது.
அதனால், எனது பரிசுத் தொகையின் ஒரு பகுதியை நான் பலஸ்தீனியர்களின் உதவிக்காக வழங்க முடிவு செய்துள்ளேன். நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் என்னால் இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
மன்னித்துவிடுங்கள் நண்பர்களே… எனக்குத் தெரியும், இப்போது டென்னிஸ் பற்றிதான் பேச வேண்டும்.
ஆனால், தினந்தோறும் இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. மன்னித்துவிடுங்கள். இது அரசியல் பற்றிய செய்தி இல்லை. மனிதாபிமானம் பற்றியது. நான் உலக அமைதியை விரும்புகிறேன். அவ்வளவுதான்.
நான் முடிந்தவரையில் சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருக்க முயற்சிக்கிறேன். ஆனால், அது மிகவும் கடினமாக இருக்கிறது. தினமும் நீங்கள் அந்த பயங்கரமான, மோசமான வீடியோக்கள், புகைப்படங்களையே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
அதனால், என்னால் தூங்க முடியவில்லை. என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், நான் நம்பிக்கையற்றவளாக உணர்கிறேன்.
என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என நான் நினைக்கிறேன். எனக்கு ஒரு மந்திரக் கரம் இருந்து இவை எல்லாவற்றையும் நான் முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆனாலும், இது மிகவும் வெறுப்படையச் செய்கிறது. இப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இந்த சிறிய அளவிலான பணம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பணம் எதையும் செய்துவிடாது என்பது எனக்குத் தெரியும். அதனால், அனைவருக்கும் விடுதலை வேண்டும், உண்மையில் அனைவருக்கும் அமைதி வேண்டும் என்று நான் விருப்புகிறேன்” என்று அவர் கூறினார்.
“It’s very tough seeing children & babies dying every day. It’s heartbreaking”
Tunisian tennis star @Ons_Jabeur announced, in an emotional post match interview that she will donate part of her WTA Finals prize money to help Palestinians.“I am very happy with the win but I… pic.twitter.com/WR4uvWdWGS
— Mohammed Zubair (@zoo_bear) November 2, 2023