“தற்போதைய யுத்தத்தின் நோக்கம் இஸ்ரேலை ஒழிப்பதல்ல. மாறாக போராட்டத்தை மலினப்படுத்தும் அதன் திட்டத்தை முறியடிப்பதே!” என ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே இப்போது திடீரென ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் எங்கு அப்பகுதியில் முழு வீச்சிலான போர் தொடங்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இப்போது அங்கு நிலவும் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இப்போது வடக்கு இஸ்ரேல் மீது திடீர் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் ஏக்கர் என்ற பகுதிக்கு அருகே அமைந்துள்ள இரண்டு ராணுவ தளங்களைக் குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல மற்றொரு இடத்தில் இஸ்ரேல் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.