இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலதிகமான வலுசக்திக்கான கேள்வி எப்போதும் இருக்கும் என்பதோடு, உத்தேச இந்தியா – சிங்கப்பூர் மின் இணைப்பு நடைமுறைக்கு வந்தால், அதில் இணைந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமான கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்தை இன்று (28) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக நாட்டின் மின்சார விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் முக்கியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமான ‘லக்தனவி’ நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட “சொபாதனவி” மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 350 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுத்தரும்.