தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்த நிலையில், சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு, இன்று (15) கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீனும் கைச்சாத்திட்டனர்.
இங்கு உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் சஜித் பிரேமதாச, தனது சொந்த தொகுதிக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்குமே உதவி செய்கிறார்.
சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக வைத்தியசாலைகளில் மூச்சுவிடும் திட்டத்தையும் இவரே அறிமுகப்படுத்தினார். காலத்தின் தேவைக்கேற்ற புதுப்புது திட்டங்களை செயற்படுத்தும் இவரிடம் நாட்டை ஒப்படைப்பதே சிறந்தது.
ஜனாதிபதியாகத் தெரிவானால், பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமென எமது கட்சி நிபந்தனை விதித்துள்ளது.
1967 இற்கு முன்னர் பலஸ்தீன் இருந்ததைப் போன்று, பலஸ்தீன் பிரதேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே அதுவாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.