திருச்சியில் அமைந்துள்ள தனியார் பாடசாலைக்கு ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு, முன்னெச்சரிக்கையாக பாடசாலைக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பாடசாலை செயல்பட்டு வருகிறது. அந்த பாடசாலையில் 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
இன்று வழக்கம் போல் பாடசாலை திறக்கப்பட இருந்த நிலையில், பாடசாலைக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து அவர் இது குறித்து ராம்ஜி நகர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து பாடசாலைக்கு சென்ற ராம்ஜி நகர் பொலிஸார், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பாடசாலை முழுவதும் சோதனை செய்தனர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல் யார் அனுப்பியது, எதற்காக அவ்வாறு அனுப்பினார்கள் என்பது குறித்து ராம்ஜி நகர் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.