பலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.
23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இப்படி இருக்கையில் காசாவில் மீண்டும் போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது போர் தொடங்கியதிலிருந்து 90% காசா மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எனவே தொற்று நோய்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம் காசா குழந்தைகளிடையே போலியோ நோய் பரவல் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, ஐநா கூறியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, போலியோ நோய் மீண்டும் பரவியுள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.