ஹமாஸ் தலைவர் கொலையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கென ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானதே; வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

Date:

மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பான உலகப் புகழ்பெற்ற சஞ்சிகையான foreignpolicy.com இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை நன்கு முகாமைத்துவம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக எமது சரியான வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம் நாட்டிற்கு பெருமளவான வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கில் எதிர்பாராத பதட்ட சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய தயார் நிலையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று விசேட குழுக்களை நியமித்துள்ளார்.

ஒரு குழு நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும், மற்றொரு குழு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பொருளாதார நிலை குறித்தும் செயற்படுகிறது. இரண்டு குழுக்களையும் கண்காணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

2022 இல், இந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு காரணங்கள் அதற்கு பங்களித்தன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, எரிபொருள் விலை அதிகரித்தது.

நிலக்கரி, கோதுமை மா போன்றவற்றின் விலைகளும் அதிகரித்தன. விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் நாடு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

கற்றுக்கொண்ட பாடங்களை கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான முன் ஆயத்தமாக ஜனாதிபதி இவ்வாறு குழுக்களை நியமிப்பது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும்.

அதற்கிணங்க, நாட்டில் வலுசக்தியை உறுதிப்படுத்துவதற்கும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் சர்வதேச நடவடிக்கைகளை ஒரு நாடு கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாடு வீழ்ச்சியடையும் வரை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என  அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...