பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.
இதில், “சண்டை முடிவுக்கு வர வேண்டும். ஹமாஸால் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு அவசர உதவி தேவை. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தொடக்க காலங்களில், போர் நிறுத்தம் தொடர்பாக ஐநாவில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது அதற்கு எதிராக இந்த நாடுகள் வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.