மக்கள் வாழ்வில் பெரும் மாற்றமொன்றைக் கொண்டு வருவீர்கள்: தேசிய ஷூரா சபையின் வாழ்த்துச் செய்தி

Date:

நாட்டின் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி  அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு தேசிய ஷூரா சபை (23) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஷூரா சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

தேசத்தின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு தேசிய ஷூரா சபை தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டு மக்களில் கணிசமான தொகையினர் நீங்கள் நாட்டை சிறப்பாக கட்டியெழுப்புவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்போடு, உங்களில் நம்பிக்கை வைத்து உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட இந்த அதி உச்ச அதிகாரத்தை மக்களது நலன்களைக் கருத்திற் கொண்டு மட்டும் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.

மக்கள் பொருளாதார,சமூக, உளவியல் ரீதியாக மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் மக்களது வாழ்வில் பெரும் மாற்றமொன்றைக் கொண்டு வருவீர்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

திசைகாட்டி என்ற உங்களது தேர்தல் சின்னத்தைப் போன்றே நாடு சுபிட்சமான ஒளிமயமான திசையை நோக்கி பயணிக்கும் என்று நம்புகிறோம்.

சுயநல அரசியலை விட்டும் விலகி புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டியெழுப்புவீர்கள் என்று நம்புகிறோம்.

விலைவாசி உயர்வு, ஊழல், இலஞ்சம், பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம், குடும்ப ஆதிக்கம் போன்றன நாட்டை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கின்றன.

ஆகவே, இனவாதத்தை ஒழித்து நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கும், சட்டத்தை ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சர்வதேசத்தில் எமது நாடு பற்றிய கீர்த்தியை கட்டி எழுப்புவதற்கும் உங்களது தலைமைத்தின் கீழ் உயர்ந்த பட்சம் முயற்சிப்பீர்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக மக்கள் பின்பற்றி வரும் ஒழுக்க விழுமியங்கள், மத கலாசார தனித்துவங்கள் என்பவற்றை பாதுகாப்பதற்கு உங்களது தலைமைத்துவம் உத்தரவாதம் தரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அண்மைக் காலத்தில் போதை வஸ்துப் பாவனை, குடும்ப நிறுவனங்களது சரிவு, சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவாட்சியின் பலவீனம், ஒழுக்க வீழ்ச்சி போன்றன மிகப் பெரும் சவால்களாக இருப்பதனால், அவற்றில் கவனம் செலுத்தி,சமூகத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்கும் வகையில் உங்களது திட்டங்களை வகுப்பீர்கள் என்றும்,
ஆட்சி விவகாரங்களில் தூரநோக்கோடு ஆலோசனை வழங்குவதற்கு துறை சார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனை சபையொன்றை நிறுவுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக நாட்டோடும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களோடும் தொடர்பான 27 முக்கிய அம்சங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை தேசிய ஷூரா சபை தயாரித்து தேர்தலுக்கு முன்னால் உங்களுக்கு கையளித்தது. அதில் உள்ள விடயங்களை நீங்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இந்த நாட்டின் ஒருமைப்பாடு, இன ஐக்கியம், தேச நிர்மாணம் என்பவற்றுக்காக நீங்கள் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தோடு தொடர்பான விவகாரங்களில் மிக முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னால் தேசிய ஷூரா சபையோடு நீங்கள் கலந்தாலோசிப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் நலனுக்காக நல்ல திட்டங்களை செயலப்படுத்த தேசிய ஷூரா சபை தனது நல்வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...