ஆத்மீக தலைமைகளால் புடம்போடப்பட்ட சமூகத்தொண்டர் அல்ஹாஜ் எம். ஏ. பாக்கிர் மாக்கார்!

Date:

-கலாநிதி அஷ்ஷைக் ஏ. அஸ்வர் அஸாஹீம் அல் அஸ்ஹரி (PhD)

  • முன்னாள் சபாநாயகரும் முதலாவது முஸ்லிம் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான தேசமான்ய அல் ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்காரின் 27ஆவது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

ஈமான் கொண்டு ஒவ்வொரு முஃமினும் முஸ்லிமும் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பாளர்கள் ஆவர்.

பல்லின மக்களோடு வாழும் இஸ்லாமியர்களின் சொல்லும் செயலும் இஸ்லாத்தினதும் இறைத் தூதரினதும் கண்ணியத்தை உயர்த்திடவோ அல்லது தாழ்த்திடவோ காரணமாக அமைகின்றன.

அதனால் தான் கடந்த காலங்களில் வாழ்ந்த எங்கள் சமூக மற்றும் அரசியல் தலைமைகள், தாம் பிரதிநிதிப்படுத்தும் இனத்திற்கும் மார்க்கத்திற்கும் அவப்பெயர்கள் ஏற்பட்டு விடாமல் மிகவும் கவனமாக வாழ்ந்து காட்டினார்கள்.

எங்களின் முன்மாதிரி அரசியல் தலைவர்கள் பல பிரதான அரசியல் கட்சிகளில் அவர்களின் கால்கள் இருந்தாலும் அவர்களின் கண்கள் என்றும் சமூகத்தின் பால் உறுதியாக இருந்தன.

வெற்றிபெறும் கட்சி தோல்வியடையும் கட்சி என்று சுயநலம் பாராது, சமூக நலனுக்காக சில வேளைகளில் வேண்டும் என்றே பிரதான கட்சிகளில் பிரிந்து பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

காரணம் அவர்களிடம் இருந்த சமூகப்பற்றும் இறையச்சமும் இறைவனின் பொருத்தத்தின் தேடலுமாகும். அதனால் அவர்கள் பன்முக சமூகத்தினராலும் மதிக்கப்பட்டார்கள், போற்றப்பட்டார்கள்.

இந்த அடிச்சுவடில் வந்த ஒரு முன்மாதிரி பிதாமகன் தான் அல்ஹாஜ் எம். ஏ.பாக்கிர் மாக்கார்.

அவர்கள் கடந்த 1997 நவம்பர் 07 மற்றும் 1998 டிசம்பர் 20 ஆம் நாட்களில் இலங்கை பாராளுமன்றத்தில், இன, மத, கட்சி பேதமின்றி பல கட்சித் தலைவர்கள், அரசியல் தலைமைகளால் ஆத்மீகம் நம்பிக்கை, நேர்மை, சமூகப்பற்று, சகவாழ்வு என்ற பண்புகளை தன்னலம் கொண்டவர் என புகழப்பட்டார்.

பொதுவாக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுதாபத் தீர்மான அமர்வு பாராளுமன்றத்தில் ஒரு தடவை மாத்திரம் நடைபெறுவது வழக்கம், ஆனால் பேருவளை மண்ணுக்கு பெருமை ஈட்டித்தந்த அப்துல் பாகிர் மாகார் அவர்களுக்காக அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் அனுதாபத் தீர்மான அமர்வு நடத்தப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.

இதன்போது ஹென்சாட்டில் பதியப்பட்டுள்ள விடயங்களே இந்தக் கட்டுரையின் பிரதான குறிப்புகளாகும்.

1- பிறப்பு:

அரேபியர்களால் பர்பரீன் என்று அழைக்கப்பட்ட முஸ்லிம்கள் முதன்முதலாக குடியேறிய பேருவளை பிரதேசத்தில், இலங்கையின் முதல் பள்ளிவாயில் அமைந்துள்ள மருதானை எனும் பகுதியில் 1917 ஆம் ஆண்டு மே மாதம்
12 ஆம் திகதி யூனானி மருத்துவப் பரம்பரையில் ஹக்கீம் அலியார் முஹம்மத் மரிக்கார் மற்றும் ராயிழா உம்மா தம்பதிகளின் புதல்வராக அப்துல் பாக்கிர் மாக்கார் அவர்கள் பிறந்தார்கள்.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகள் இலங்கையின் விசேடமாக பேருவளையின் பொற்காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு பேருவளையிலும் அதை அண்மித்த இடங்களிலும் உள்நாட்டு மற்றும் அரபு நாடுகளில் இருந்து வந்த பல ஆத்மீகத் தரீக்காக்களின் தலைவர்கள் மக்களை ஆத்மீக வழியில் நெறிப்படுத்தும் உயரிய பணியினை ஆரம்பித்து, அவர்களின் பிரதிநிதிகளையும் பேருவளை மண்ணில் உருவாக்கினார்கள்.

மக்கா முகர்ரமா மற்றும் யமனில் இருந்து வந்த அஷ்ஷேக் அப்துல்லாஹ் பாஃபகீஹ் மௌலானா, அஷ்ஷேக் முஹம்மத் ஸாலிஹ் மௌலானா, அஷ்ஷேக் முபாறக் மௌலானா (ரஹிமஹுமுல்லாஹ்) போன்றவர்கள் விசேடமாக இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.

இப்படியான சூழலில் வாழ்த அப்துல் பாகிர் மாகார் அவர்களுக்கு தனது பாடசாலைக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தூய மனிதப் புனிதர்களின் சகவாழ்வும் வழிகாட்டலும் நிறையக் கிட்டின.

2. கல்வி ஆளுமையும் பதவிகளும்

மும்மொழியிலும் தேர்ச்சிபெற்ற அப்துல் பாகிர் மாகார் அவர்கள் பேருவளை மாளிகாஹேன முஸ்லிம் மகா வித்தியாலயம் (ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம்), கொழும்பு புனித செபஸ்டியன் வித்தியாலயம், ஸாஹிராக் கல்லூரி என்பவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்றுக்கொன்டார்கள்.

பாடசாலைக் காலத்தில் கல்லூரியினால் வெளியிடப்பட்டு வந்த சஞ்சிகையின் ஆசிரியராக, முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக, தமிழ் கழகத் தலைவராக இன்னும் பல்வேறு பதவிகளை வகித்து தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்கள்.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவரகள் 1940 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று களுத்துறை நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக கடமையாற்றினார்கள்.

மிகக்குறுகிய காலத்தில் களுத்துறை நீதிமன்றத்தில் சிரேஷ்ட குற்றவியல் சட்டத்தரணியாக தன்னை வளர்த்துக் கொண்டார்கள்.

இக்காலங்களில் தன்னை நாடி வந்தவர்களிடம் விசேடமாக வறிய மக்களிடம் கொடுப்பனவுகள் எதையும் எதிர்பாராது உயரிய சேவையாற்றிடுவார் என மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எம். எச். எம். அஷ்ரப் 1997 நவம்பர் 07 இல் நடந்த பாராளுமன்ற அனுதாப பிரேரணையின் போது சுட்டிக்காட்டினார்கள்.

3. அரசியல் வாழ்க்கை

அன்று ஸாஹிராக் கல்லூரியின் அதிபர், கற்றுத்தேர்ந்த ஆளுமை, தூய மனப்பான்மை, மார்க்கப்பற்று போன்ற சிறப்பு அம்சங்களுடன் வாழ்ந்து, புனித மதீனா மண்ணில் சங்கமமாகிய சுதந்திரப் போரளி சமூகத்தொண்டர் மர்ஹூம் துவான் புர்கானுடீன் ஜாயா அவர்களின் குணநலங்களும் வழிகாட்டல்களும் அப்துல் பாகிர் மாகார் அவர்களின் வாழ்விலும் பெரிதும் தாக்கம் செலுத்தியது.

அரசியல் களத்தில் முதல் முதலாக 1947 ஆம் ஆண்டு தனது ஆசான், துவான் புர்கானுடீன் ஜாயா அவர்களின் மத்திய கொழும்பு தேர்தல் பிரச்சாரங்களுக்கான அமைப்பாளராக அப்துல் பாகிர் மாகார் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

(எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அனுதாபப் பிரேரணை 1997.11.07).

1950 ஆம் ஆண்டு பேருவளை நகர சபை உறுப்பினராக உள்வாங்கப்பட்டு பின்னர் அதன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு பேருவலை மக்களுக்கு பெரிதும் சேவையாற்றினார்கள்.

1960 இல் பேருவலையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்கள். எல்லா சகோதர மதத்தவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட இவர் 1977 இல் பிரதி சபாநாயகராக கடமையாற்றி, பின்பு 1978 முதல் 1983 வரை
எல்லோருடைய நன்மதிப்பையும் வென்ற சபாநாயகராக கடமை புரிந்தாரகள்.

திரு. பீ. பீ தேவராஜ் ஐயா அவர்கள் பாராளுமன்ற அனுதாபப் பிரேரணையின் போது உரையாற்றுகையில்;

அப்துல் பாகிர் மாகார் அவர்கள் பாராளுமன்றத்தில் பலரோடும் பண்பாக பழகும் ஒரு சிறந்த மனிதர், தான் எடுத்த காரியத்தை கொள்கை வழுவாது, கட்சிப் பேதம் பாராது நடுநிலை வகித்து நியாயத்தின் அடிப்படையில் செயலாற்றுபவர் என்றார்கள்.

அப்துல் பாகிர் மாகார் தான் சபாநாயகராக இருந்த 1980 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கையின் பதில் ஜனாதிபதியாக சில நாற்கள் கடமையாற்ற இறைவன் அவர்களுக்கு வாய்ப்பளித்து, இலங்கை முஸ்லிம்களையும் பேருவளை மக்களையும் வல்ல நாயன் பெருமைப்படுத்தினான்.

இவர் 1988 இல் மேல் மாகாணத்தின் முதல் ஆளுநராக கடமையை ஏற்று தொடர்ந்து ஐந்து வருடங்கள் 1993 வரை பதவி வகித்தார்கள். அப்துல் பாகிர் மாகார் அவர்கள் முஸ்லிம் லீக்கின் தொண்டராகவும் முஸ்லிம் லீக் வாலிப முன்ணணியின் ஸ்தாபகர் என்றும் இன்னும் பல சிறப்பு பதவிகளின் ஊடாக மக்களின் நலனுக்காக அர்ப்பணத்துடன் கடமையாற்றியுள்ளார்.

4- சமூகப் பற்றும் சகவாழ்வும்

இலங்கையில் இஸ்லாமியர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும், அதே நேரத்தில் ஏனைய சமூகத்தினருடன் சுபீட்சத்தையும் சகவாழ்வையும் பேண வேண்டும் என்ற தூரநோக்கோடு செயல்படுவர்கள் அப்துல் பாக்கிர் மாக்கார் அவர்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் யூ. எல். எம். முஹிதீன் தனது அனுதாபத்தை பதிவிடும் போது, நான் ஸாஹிராக் கல்லூரியில் படிக்கும் போது எனது ஆசிரியர் அப்துல் பாக்கிர் மாக்கார்  அவர்கள் மாணவர்களுக்கு சில விடயங்களை தொடர்ந்தும் வலியுறுத்துவார்.

ஒன்று, சிங்கள மொழியை நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள் இரண்டாவது இலங்கையில் வாழும் மாற்றுமதச் சகோதரர்களை மதித்து நடக்கப் பழகுங்கள், மூன்றாவதாக, நாடு நமக்கு என்ன செய்தது? என்பதை விடு, நான் நாட்டுக்குச் என்ன செய்கிறேன் என்பதை சிந்துத்துப் பாருங்கள்.

சின்னஞ் சிறிய இலங்கை தீபகற்பத்தில் வாழும் மக்களின் இன, மத ஒற்றுமைக்கு எதிராக, இனங்களுக்கிடையில் பிரிவினையை தோற்றுவிக்கும் நோக்குடன் ஒரே நாடு ஒரே சட்டம் என்று கடந்த சில வருடங்களாக பேசுகின்றனர்.

ஆனால் ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்பே அப்துல் பாகிர் மாகார் தான் சபாநாயகராக இருக்கும் காலத்தில் ‘ஒரே நாடு ஒரே இனம்’ என்ற கோட்பாட்டின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கிடையில் சுபீட்சத்தையும் சகவாழ்வையும் தோற்றுவிக்க வேண்டும் என கடும்பாடுபட்டார் என்பதாகவும்.

இந்த முயற்சியில் அவரது வழிகாட்டிகளாகிய டாக்டர் துவான் புர்கானுடீன் ஜாயா, டாக்டர் எம். ஸி. எம். கலீல், டாக்டர் பதியுதீன் மொஹமட் போன்றவர்களின் முன்மாதிரிகளைக் கண்டுபிடித்ததாகவும், இதனை அமுல்படுத்தும் போது பெரும்பான்மையாக வாழும் மக்கள் எந்தவித அசௌகரியங்களுக்கும் தள்ளப்படக்கூடாது என்பதிலும் மிக அவதானத்துடன் இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரீ. எச். என். ஜயமக தனது பாராளுமன்ற அனுதாப பிரேரணையின் போது 1997 நவம்பர் 07 ஆம் திகதி பதிவுசெய்துள்ளார்.

பாக்கிர் மாக்கார் அவர்களது பரந்த சேவையை சுருக்கமாகப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

• பேருவளையை இரட்டை அங்கத்துவர் தொகுதியாக்க வேண்டும் என வாதிட்டு, முஸ்லிம்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தை உறுதிசெய்தமை,

• சபாநாயகராக இருந்தவேளையில், இந்தோனேசியா ஹாஜிகள் விமானம் விபத்தக்குள்ளான போது, தனது சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி,

ஜனாஸாக்களை இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைத்து, அவர்களின் ஞாபகார்த்தமாக சீதுவையில் ஒரு பள்ளிவாசலையும் நிறுவியமை,

• கிழக்கு மாகாணத்தில் 1978 ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி சூறாவளித் தாக்குதால் துன்புற்ற மக்களின் துயரத்தில் பங்குகொண்டு உதவி செய்தமை,

• மட்டக்களப்பு – ஏறாவூரில் ஈராக் அரசின் உதவியுடன் சதாம் ஹுஸைன் கிராமத்தை பெற்றுக்கொடுத்தமை,

• கந்தளாய்க் குளம் உடைந்து முஸ்லிம் கிராமங்கள் அவலமடைந்த சந்தர்ப்பத்தில் அங்கே நேரடியாகச் சென்று சமூகத்திற்காக தொன்றாட்டியமை,

• சுமார் 500 க்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று, முஸ்லிம் லீக் வாலிப முன்னணியை தாபித்து, இலங்கை முஸ்லிம்கள் அரசியலில் ஈடுபாடுள்ளவர்களாக மாறவேண்டும் என்பதற்காக உழைத்தமை,

• பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் இடங்களில் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று காத்தான்குடியில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியுள்ளதுடன், அதன் பின்னர் ஓராண்டு காலத்துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தான் உருவாக்கியதை நினைக்கும் போது பெருமகிழ்ச்சியடைகிறேன் என அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை,

பரந்த சேவை மனப்பாங்கினைக் கொண்டிருந்ததால், நாட்டின் அனைத்து இன, மதத்தவர்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் ஓர் உதாரணமாக, திரு. ரீ. சித்தார்தர் ஐயா (பா.உ) அவர்கள் அனுதாப பிரேரனையின் போது, பின்வருமாறு கூறுகிறார்,

1979 ஆம் ஆண்டு யாழ் நகர மக்கள் சார்பில் யாழ்ப்பாண மாநகர சபையால் இவருக்கு ஒரு வரவேற்பளிக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் யாழ் மாநகர சபையால் கௌரவிக்கப்பட்டமை அதுவே முதற் தடவையாகும் என்று பாராட்டியமையைக் குறிப்பிடலாம்.

5- இறை நம்பிக்கையும் ஆத்மீகமும்

இலங்கையில் வாழ்ந்த நன்மதிப்பைப் பெற்ற அரசியல், சமூகத் தலைவர்களின் பின்னணியில் ஓர் ஆத்மீகக் குருவின் வழிகாட்டல் இருந்து வந்துள்ளமை வரலாறாகும்.

அதே போன்று அப்துல் பாக்கிர் மாக்கார் அவர்களுக்கு மக்கா முகர்ரமாவில் ‘பைத்தல் பாஸி’யில் வசித்த ஷாதுலிய்யத் தரீக்காவின் ஆத்மீகத் தலைவர்களான அஷ்ஷைக் இப்ராஹீம் அல் பாஸி, அஷ்ஷைக் கலாநிதி முஹம்மத் அல் பாஸி அல் அஸ்ஹரீ (ரஹமஹுமுல்லாஹ்) போன்றோர்களின் நெருங்கிய நேரடித் தொடர்பும் வழிகாட்டலும் இருந்து வந்துள்ளதுடன், அவர்களிடம் ‘பைஅத்தும் பெற்று ஷாதுலிய்யாத் தரீக்காவின் காலை, மாலை திக்ர் மஜ்லிஸ்களை தலைமை தாங்கி நடடாத்தும் அனுமதி பெற்ற முகத்தமுஷ் ஷாதுலியாகவும் இருந்து வந்தார்கள்.

இலங்கையின் முதற் பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்ராரை புனநிர்மாணம் செய்த பெருமையும் அவர்களையே சாரும்.

இலங்கையில் இருந்து ஹஜ்ஜுக்குச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்காவின் இக்வான்கள் ‘பைத்துல் பாஸி’க்குச் சென்றால், கொச்சைத் தமிழில் பர்க்கிர் சொஹமா? நளீம் ஹாஜியார் சொகமா? என்று தவறாது, சுகம் விசாரிக்கும் பழக்கம் டாக்டர் பாஸி அவர்களிடம் இருந்ததாக பரவலாகப் பேசப்படுவதுண்டு.

இவர்களது ஆத்மீக, வணக்க வழிபாடுகள், சிறந்த குணநலன்கள், காலை மாலை அவ்ராதுகள் போன்றவற்றில் இருந்த ஆழமான ஈடுபாடுகள் பற்றி அவர்களோடு உள்நாட்டு மற்று வெளிநாட்டுப் பிரயாணங்கள் மேற்கொண்டு மர்ஹூம்களான அல் ஹாஜ் எம்.எச்.எம். அஸ்வர், எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் ஸெய்யித் அலவி மௌலானா போன்றவர்கள் பாராளுமன்ற அனுதாப உரையின் போது குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அனுதாப உரையில் கலந்து பேசிய பலரும், அப்துல் பாக்கிர் மாக்கர் அவர்களின் சகல நற்குணங்களும் அவர்களது மகன் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களிடம் இருப்பதைக் கோடிட்டுக்காட்டினர்.

அதிலும் விஷேடமாக, எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், இம்தியாஸின் குணநலன்கள் பாக்கிர் மாக்கார் ஒரு நல்ல மனிதர் என்பதற்கு ஒரு சான்றிதழ் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று,  திரு. ரி. சித்தார்த்தன் ஐயா அவர்கள் தனது அனுதாப உரையை முடிக்கும் போது, திருக்குறளில்நின்றும் பின்வரும் குறலை ‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’ என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களுக்கு உவமையாகப் புகழ்ந்து பாடினார்.

அப்துல் பாக்கிர் மாக்காரின் நேர்மை, தேசிய மற்றும் சமூகப் பற்று ஆகியவைகளுக்குக் காரணம், அவரிடம் இருந்த ஆத்மீக ஈடுபாடுகள், நல்ல மனிதர்களுடன் இருந்த சகவாசம் என்பனவாகும்.

எனவே, இவர்களது வாழ்க்கை, சமூகத் தொன்று புரியும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களை பொருந்திக்கொண்டு அவர்களது மண்ணறையை சுவர்க்கப் பூங்காவாக ஆக்குவானாக!

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...