புத்தளம் வண்ணாத்திவில்லு, அருவைக்காலுவில் தின்ம கழிவு அகற்றும் நடவடிக்கைகளினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாக கிளீன் புத்தளம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தி – புத்தளம் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02) தேசிய மக்கள் சக்தி புத்தளம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
கிளீன் புத்தளம் அமைப்பு சார்பாக அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் அவர்களின் தலைமையில் வருகைதந்த அதன் பிரதிநிதிகள், தே.ம.ச.யின் சூழல் கொள்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புத்தளம் பிரதேசத்தின் சூழல் பாதுகாப்பு தொடர்பாக தே.ம.ச.யுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்ததாக தெரிவித்தனர்.
தே.ம.ச.யின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும், புத்தளம் மாவட்ட அமைப்பாளருமாகிய பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் நகர குழுத் தலைவர் எம்.ஏ.எம். ரியாஸ் ஆகியோர் தே.ம.ச. சார்பாக கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் கருத்தில் குப்பைகள் கழிவுகள் என்பன ஒரு வளம்’ என்று தெரிவித்த பேராசிரியர் சந்தன அவர்கள், ‘குப்பை கழிவு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதேநேரம் வனவிலங்குகள், கடல்; நீரினங்கள் மற்றும் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
தே.ம.ச. அரசாங்கத்தில் அந்தந்த பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை அப்பிரதேசத்திலேயே முகாமைத்துவம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்றும் தெரிவித்தார்.
கிளீன் புத்தளம் அமைப்பினரால் வண்ணாத்திவில்லு, அருவைக்காலுவில் தின்ம கழிவு அகற்றும் நடவடிக்கைகளினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் தொடர்பான அறிக்கையை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் செயற்குழுவினரிடம் கையளித்தனர்.