போர் நிறுத்தம் சாத்தியமில்லை என்று ஐநாவில், இஸ்ரேல் அதிபர் கூறியதையடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லா குறிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலஸ்தீனத்துடன் இஸ்ரேல் தனது எல்லையை பகிர்ந்துக்கொண்டிருக்கிறது. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய நாடாக இருந்த இஸ்ரேல், கொஞ்சம் கொஞ்சமாக பலஸ்தீனத்தை ஆகிரமித்து எல்லையை பெரிதுபடுத்திக்கொண்டது.
மட்டுமல்லாது, காசா மக்களை ஒடுக்குமுறையும் செய்தது. இதற்கு எதிராக உருவானதுதான் ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய பலஸ்தீன விடுதலை அமைப்பு. இந்த அமைப்பு கடந்த அக்டோபரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த 1500 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. ஆனால், 1500 பேரின் உடல்களை அந்நாடு காட்டவில்லை. இந்த தாக்குதலை காரணம் காட்டி காசா மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 41,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் கை, கால்களை இழந்துள்ளனர். உணவு பஞ்சமும், தொற்று நோய் பிரச்னையும் ஏற்பட்டிருக்கிறது. இதை பார்த்து பொங்கி எழுந்து, இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் இறங்கிய மற்றொரு அமைப்புதான் ஹிஸ்புல்லா.
ஈரான் ஆதரவுடன் லெபனானிலிருந்து செயல்படும் இந்த அமைப்பு, வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வந்தது. உள்ளே ஹமாஸும், வெளியே ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்த டென்ஷன் ஆன இஸ்ரேல், தற்போது லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
பேஜர், வாக்கி டாக்கி என சைபர் தாக்குதலை தொடர்ந்து, போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஏற்கெனவே 600க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், நேற்று நடந்த தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நேற்று ஐநா கூட்டத்தில் லெபனான் மீதான் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய, இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, போ் நிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார். அவர் பேசி முடித்தவுடன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தீவிர தாக்குதலை நடத்தியது.
கடந்த 10 மணி நேரமாக இந்த தாக்குதல் நீடித்திருக்கிறது. ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகனைகளை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன.
இந்த கொடூர தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் பொதுச்செயலாளரான ஹசன் நஸ்ரல்லா குறிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அவர் இறந்துவிட்டால் போரின் தன்மையே மாறிவிடும்.
அதாவது ஹிஸ்புல்லா ஹைபர் சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்த தொடங்கிவிடும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். இதை தடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
காரணம் இந்த ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்கும். ரேடாரிலும் சிக்காது. எனவே இது குறி வைத்த இடத்தை நிச்சயம் தாக்கி அழித்துவிடும்.
எனவே போரின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. மறுபுறும் லெபனானில் தரைவழியாக ஊடுருவ இஸ்ரேல் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.