ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பொதுவாக காத்தான்குடி மீது கொண்ட நல்லெண்ணத்தினாலும், குறிப்பாக ஸூபிஸ சமூகத்தின் மீது கொண்ட அனுதாபத்தினாலும், காத்தான்குடியில் அடக்கம் பெற்றுள்ள எனது தந்தை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் “அல் அப்தாலீ” அவர்களிடம் ஆசி பெறுவதற்காகவும் 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு வந்து எனது தந்தையின் அடக்கவிடம் சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார் எனவும் இலங்கைத் திரு நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கையைச் சேர்ந்த ஸூபிச சமூகத்தவர்கள், ஸூபிசத்தின் ஆதரவாளர்கள், முரீதீன்கள், முரீதாத்துகள் அனைவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் டிரஸ்டின் ஸ்தாபகர் காத்தான்குடி மௌலவி அப்துர் ரௌப் மிஸ்பாஹீ பஹ்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
39 பேர் போட்டியிடும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நானும், ஸூபிச சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இப்போது ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிப்பதென்று முடிவு செய்துள்ளோம்.
39 வேட்பாளர்களில் இவரைத் தெரிவு செய்ததற்கான காரணம் இவரிடம் அனுபவமும், ஆளுமையும், வெளிநாட்டுத் தொடர்பும், செல்வாக்கும் இருப்பதேயாகும்.
மேற்கண்ட விஷேடங்கள் ஏனைய வேட்பாளர்களிடம் இல்லை என்பதை அதிகமானவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க மட்டுமே இரண்டு வருடமேனும் ஜனாதிபதியாக பதவி வகித்த அனுபவமுள்ளவராவார். மற்றவர்களுக்கு அவ்அனுபவம் இல்லை.
எமக்கு எது தேவையாயினும் அதை அல்லாஹ்விடம் கேட்பதும், அதை அடைவதற்கு முயற்சிப்பதும் எமது கடமையாகும். இதை நாம் மறந்து விடாமல், எமக்கிடையே உள்ள குற்றங் குறைகளை மறந்து நாம் அனைவரும் ஒரு வாக்கைக் கூட வீணாக்காமல் “கேஸ் சிலிண்டர்” சின்னத்துக்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்க அவர்களை வெற்றி பெறச் செய்து அவர் மூலம் எமது உரிமைகளைப் பெறுவோம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.