ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத நிறுவன முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தனியார் துறை மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் துறை நிறுவனங்களையும் பஃப்ரல் அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஒரு முதலாளி இதனை புறக்கணித்து நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு லட்சம் அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பஃப்ரல் அமைப்பு, தனியார் துறை மற்றும் அரை அரசு ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.