நேபாளத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் அந்த நாடு வெள்ளத்தில் மிதக்கிறது.
பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.
இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நாடு நேபாளம். இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது.
கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தலைநகர் காத்மாண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 112 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 3 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கவ்ரெபலன்சவுக் மாவட்டம் தான் மிக அதிமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில்,
“காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள ராணுவம், காவல்துறை, துணை ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது” என்றார். மக்கள் அவசியம் இன்றி பயணிக்க வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.