லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தஹியே மீதான இஸ்ரேலிய விமான குண்டு வீச்சில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலை செய்யப்பட்டதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த் தியாகம் புரிந்துள்ள அஷ் ஷஹீத் ஹசன் நஸ்ரல்லாஹ் அவர்களின் குடும்பத்தினர், அவரது சகாக்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினருக்கு எஙகள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், லெபனான் மீதான சரமாரியான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை நாங்கள் வன்மையாக வலியுறுத்துகின்றோம்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் ஏற்கனவே 700 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் லெபனானையும் இஸ்ரேல் குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை பலஸ்தீனம் மற்றும் லெபனானில் மடடுமல்லாது, முழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மிகவும் கவலையளிக்கூடிய விதத்தில் இடம் பெற்றிருப்பதோடு, அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் வெறியாட்டத்தினால் பிராந்தியத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஹிஸ்புல்லாஹ் தலைவர் மற்றும் தியாகிகளான அவரது அமைப்பினரின் பங்களிப்பு காசாவை விடுவிப்பதில் மட்டுமல்லாது, பலஸ்தீனத்தில் பரவலாக நடந்து வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகளாவிய கவனத்தைக் குவிப்பதிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இன்றுள்ள சூழ்நிலையில், இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் அந்நாட்டின் ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் போன்ற இயக்கங்கள் தொடர்ந்தும் போராடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
எல்லா துயரச் சம்பவங்களுக்கும் அப்பால் பலஸ்தீனத்தின் மீட்சிக்கான எங்களது ஆதரவு எப்பொழுதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.