சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி நாட்டின் நிதிச் சவால்களை தீர்க்க முடியும் என்று மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் வங்கிகளுடனும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
தமது நாடு எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் தற்காலிகமானவை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.
கையிருப்பு குறைந்து வருவதால் தற்போது மாலைத்தீவு தற்காலிக சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிப்புற நிதி தலையீடு இல்லாமல் அதைத் தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் மூலோபாயத்தில் வரி முறை சீர்திருத்தம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்தல், சீனா மற்றும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் போன்றவை உள்ளடங்கும் என வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் சுட்டிக்காட்டினார்.