மஸ்ஜிதுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழிகாட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் தொழுகை மிக முக்கியமானதாகும். அதனை எந்நிலையிலும் விடுவதற்கு மார்க்கம் அனுமதிப்பதில்லை. நின்ற நிலையில் தொழ முடியாதவர் உட்கார்ந்த நிலையிலும் உட்கார்ந்து தொழ முடியாதவர் சாய்ந்த நிலையிலும் தொழ வேண்டும் என்று இஸ்லாம் வழிக்காட்டியுள்ளது.
பர்ழான தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆண்கள் மீது ஃபர்ழு கிஃபாயாவாகும். அதனை சக்தி உள்ள ஒருவர் மஸ்ஜிதுக்கு வருகை தந்து ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. அதற்கு பல சிறப்புகளும் உள்ளன. பர்ழான தொழுகையை மஸ்ஜிதில் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்கு சக்தியிருந்தும் அதனை வீட்டில் நிறைவேற்றுவதை இஸ்லாம் விரும்பவில்லை.
ஆகவே, சக்தி உள்ள ஒருவர் மஸ்ஜிதுக்கு வருகைத் தந்து தொழுகையை நிறைவேற்றுவது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும். அவ்வாறே நோய், அச்சம், துணைக்காக வருவதற்கு எவருமில்லாமை போன்ற காரணங்களுடையவர்களுக்கு வீட்டில் தொழுவதற்கு அனுமதியிருந்த போதிலும் அவர்களும் தொழுகைகளை மஸ்ஜிதில் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது சிறந்ததாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு தோழர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைப் மஸ்ஜிதுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள அனுமதி கேட்டபோது, நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்து, பின்னர் அவரை அழைத்து, உமக்கு அதானுடைய சத்தம் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கவர் “ஆம்” என்றார். அவ்வாறென்றால் ஜமாஅத் தொழுகையில் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று கூறிய விடயம் ஸஹீஹு முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், மஸ்ஜிதுக்கு வருகை தர முடியாமல் தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு வீட்டில் தொழுவதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கிய விடயமும் ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஏதாவது தகுந்த காரணம் உள்ளவர்கள் இன்னும் சக்கர நாற்காலி போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் மஸ்ஜிதுக்கு வருகை தந்து தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக விரும்பும் போது அவர்களுக்கு மஸ்ஜிதுக்குள் நுழைவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல், தேவைப்படும்போது தொழுவதற்கான இடங்களை ஒதுக்கிக் கொடுத்தல் போன்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு மஸ்ஜித் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி மஸ்ஜிதுக்கு வருகை தந்து அவற்றில் தொழுபவர்கள் மஸ்ஜிதின் சுத்தத்தைப் பேணுவதற்கும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதற்கும் தமது சக்கர நாற்காலிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
இன்னும், தொழுகைக்காக வருகைத்தரும் ஏனையவர்கள் இத்தகையவர்களுக்கு உதவி ஒத்தாசையாக நடந்து கொள்வதும் நன்மைக்குரிய விடயமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிரையில் அமர்ந்து தொழும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மார்க்கச் சட்டங்களை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.