ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு இரண்டாமிடம்..!

Date:

இந்தியாவின் பெங்களூரு, கோரமங்களம் உள்ளக விளையாட்டரங்கில் (27) நடைபெற்ற 13ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான பரபரப்பான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கையை எதிர்த்தாடிய முன்னாள் சம்பியனான சிங்கப்பூர் 67 – 64 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி 4ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக மகுடம் சூடியது.

மறுபுறத்தில் சிங்கப்பூர் அணிக்கு கடைசி நிமிடம் வரை பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை அணி, தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகும் வாய்ப்பை தவறவிட்டு 5ஆவது தடவையாக 2ஆவது இடத்தைப் பிடித்தது.

இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் தாம் ஆடிய அனைத்து குழுநிலைப் போட்டிகளிலும் வெற்றியீட்டி தோல்வியடையாத அணிகளாக இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் முதல் காலிறுதியில் அபாரமாக ஆடிய சிங்கப்பூர் அணி 17 புள்ளிகளைப் பெற, இலங்கைக்கு 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஆனால் இரண்டாவது காலிறுதியில், இலங்கை வீரர்கள் தங்களது முந்தைய தவறுகளை திருத்திக்கொண்டு ஆட்டத்தில் நுழைந்தனர், அங்கு அவர்கள் 15 புள்ளிகளைப் பெற்றனர்.

ஆனால், சிங்கப்பூர் வீரர்கள் 11 புள்ளிகளைப் பெற்றனர். எனினும் முதல் காலிறுதியில் முன்னிலை பெற்றதன் காரணமாக ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் சிங்கப்பூர் அணி 28-27 என முன்னிலை வகித்தது.

இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது காலிறுதியில் இலங்கை வீரர்கள் போட்டியின் தன்மையை முற்றாக மாற்றியமைத்து 15 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள, சிங்கப்பூர் அணிக்கு 11 புள்ளிகளைப் மாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி, மூன்றாவது காலிறுதியின் முடிவில் இலங்கை 42-39 என முன்னிலையில் இருந்தது, ஆனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற நான்காவது காலிறுதியில் சிங்கப்பூர் அணி, மேலும் 13 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள, இலங்கை அணியால் 10 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது.

எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் கடைசி நிமிடத்தில் இலங்கை அணி பெற்ற கடைசி புள்ளியின் காரணமாக, போட்டியின் இறுதிப் புள்ளிகள் 52-52 என சமநிலையில் இருந்தது.

இதனால் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன்படி, போட்டியின் முதல் மேலதிக காலப்பகுதியில் இரு அணிகளும் தலா 07 புள்ளிகளைப் பெற்று மீண்டும் 59-59 என சமனான புள்ளிகளைப் பதிவு செய்தது.

இதனையடுத்து வழங்கப்பட்ட இரண்டாவது கூடுதல் நேரத்தில் சிங்கப்பூர் வீரர்கள் போட்டியின் முடிவை மாற்றி 08 புள்ளிகளைப் பெற, இலங்கை அணியால் 05 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூர் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இறுதியாக, 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக இலங்கை மகுடம் சூடிய நிலையில், இரண்டாவது இடத்தைப் பெற்று திருப்தி அடைந்த சிங்கப்பூர் அணி, இன்று நான்காவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை 10 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று சாதனை படைத்தமை விசேட அம்சமாகும்.

மறுபுறத்தில் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை 6 தடவைகள் வென்ற இலங்கை அணி, இம்முறை போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவி ஐந்தாவது தடவையாக 2ஆவது இடத்தைப் பிடித்தது.

(B.F.M Rishad)

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...