சமூகங்களுக்கிடையே பாலமாக செயற்பட்ட நியாஸ் ஆசிரியரின் மறைவுக்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அனுதாபம்!

Date:

சிங்கள மொழியில் புலமை வாய்ந்த நியாஸ் சேர் அவர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நீண்ட கால அங்கத்தவர். ஜமாஅத்தே இஸ்லாமி மேற்கொண்ட சிங்கள மொழியிலான சகல முயற்சிகளின் போதும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியவர்.

‘பிரபோதய’ சஞ்சிகையின் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ‘தப்ஹீமுல் குர்ஆன்’ என்ற தப்ஸீர் சிங்கள மொழிக்கு பெயர்க்கப்படுகின்ற பணியில் நீண்ட காலமாக மர்ஹூம் ஏ.எல்.எம். இப்ராஹிம் மௌலவி அவர்களோடு இணைந்து பணியாற்றியவர். தர்ஜமதுல் குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டவர். சிங்கள மொழியில் இஸ்லாத்தை முன்வைக்கின்ற பல பணிகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கின்றவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி குடும்ப வாழ்க்கையிலே ஈடுபடுவதற்கு உதவி செய்து பல்வேறு வகையில் ஒத்துழைத்தவர்.

நியாஸ் மாஸ்டருடைய தந்தை கல்லோயா அபிவிருத்தி சபையில் ஒரு உத்தியோகத்தராக பணியாற்றியதன் காரணமாக அம்பாறையில் அவருடைய குடும்பம் நீண்ட காலம் குடியிருந்தது. அந்த வகையில் அம்பாறையில் சிங்கள மொழி பாடசாலையில் ஜி.சி.ஈ. சாதாரண தரம் வரை கற்ற அவர் பின்னர் ஆசிரியர் நியமனம் பெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கால்லூயில் கணிதத் துறையில் பயிற்சி பெற்றார்.

ஆசிரியர் பயிற்சி கலாச்சாலையில் பயிலுணராக இருக்கும் காலத்திலேயே ஒரு சமூக செயற்பாட்டாளராக இனம் காணப்பட்டார். கல்லூரியில் ஏற்பட்ட அரசியல் தலையீடு நிலைமைகளின் போது மாணவர்களோடு இணைந்து போராடியதன் விளைவாக’ கொமைணி’ என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்.

உக்குவளையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வேரூன்றுவதற்கும் வளர்வதற்கும் பலருடன் இணைந்து பணியாற்றிய நியாஸ் ஆசிரியர் அவர்கள் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இஸ்லாத்தை முன்வைக்கின்ற பணியிலே நீண்ட காலமாக ஈடுபட்டார்.

சர்வ சமய அமைப்புகளோடும் நல்லிணக்க குழுக்களோடும் பௌத்த, கத்தோலிக்க, ஹிந்து குருமார்களோடும் ஏனைய பல்வேறு அமைப்புகளோடும் நீண்ட காலமாக பணியாற்றினார். சர்வ சமய அமைப்பின் உதவிச் செயலாளராகவும் அதன் நிறைவேற்று நிர்வாக குழு அங்கத்தவராகவும் இலங்கை பூராவும் நடைபெறுகின்ற கூட்டங்களில் ஆர்வமாக கலந்து கொண்டிருந்தார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மொழிபெயர்த்து வெளியிட்ட பல சிங்கள நூல்களின் மொழிபெயர்ப்பாளராகவும் அவற்றின் ஒப்பு நோக்குனராகவும் மட்டுமல்லாமல் பிரசுரங்களை சரிபார்த்து மொழியாக்கம் செய்து மீள் பிரசுரத்துக்கு தயாரிப்பவராகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தார்.

லங்கா தீப பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். குறிப்பாக தமிழ் மொழி பத்திரிகைகளில் வருகின்ற விடயங்களை அடியொட்டியதாக தமிழ் மக்களின் குரலை பிரதிபலிப்பதாக அவருடைய சிங்கள கட்டுரைகள் அமைந்திருந்தன.

பிரபோதய மாதாந்த சஞ்சிகையிலும் தமிழ் தேசிய பத்திரிகைகளிலும் அவர் பல கட்டுரைகளை எழுதினார். அவர் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.

1996 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமின் முழு நேர ஊழியராக இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் ஐபிசி அச்சகத்தில் பணியாற்றிய அவர் பின்னர் ஜமாஅத்தின் சிங்கள மொழி பகுதியில் இணைந்து பல்வேறு காத்திரமான பணிகளை ஆற்றினார்.

அவருடைய பங்களிப்பினால் பல சிங்கள புத்தகங்கள், கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொள்கைப் பிடிப்பும் அர்ப்பண சிந்தையும் அயராத உழைப்பும் தியாக மனப்பாங்கும் இனிமையாக பழகுகின்ற சுபாவமும் அவருடைய தனிப் பண்புகளாக இருந்தன.

எடுத்த வேலையை உரிய நேரத்தில் நேர்த்தியாக முடிப்பது அவருடைய மற்றொரு சிறப்பு பண்பாக இருந்தது. இறுதிக்காலத்தில் சிங்கள தர்ஜுமாவை மீள் பதிப்பு செய்வதற்காக அச்சுப் பிழைகள் மற்றும் இனங்காணப்பட்ட பிழைகளை திருத்தும் பணியிலே தன்னை ஈடுபடுத்தி முழு தர்ஜமாவையும் ஒருமுறை வாசித்து சரி பார்த்து நிறைவு செய்து கொடுத்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் தங்கி இருந்த காலத்தில் அங்கிருந்த ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதிலும் சில காலம் ஈடுபட்டார்.

தெஹிவளையில் சில காலம் இயங்கிய இஸ்லாமிய புத்தக நிலையத்தின் கிளையிலும் அவர் பணியாற்றினார்.

மார்க்க விழுமியங்களை பேணி மிகவும் எளிமையாக தனது வாழ்க்கையை ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அமைத்துக் கொண்ட எம்.எச்.எம். நியாஸ் அவர்களது பாவங்களை அல்லாஹுத்தஆலா மன்னித்து அவருக்கு உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்கத்தை வழங்க நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

அவருடைய குடும்பத்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கி வைப்பானாக.

ஆமீன்.

M.H.M. Hassan
Asst. General Secretary
Sri Lanka Jama`athe Islami

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...