இன்று 45 நிமிடங்கள் பிறை தென்படும்: ‘ஆனால் அது இரண்டாம் பிறை அல்ல’: பிறைக்குழு விளக்கம்

Date:

ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை நேற்றைய தினம் (03) வியாழக்கிழமை இரவு தென்படவில்லை.

அதற்கமைய, ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் முதல் நாளாகிய இன்று (04) வெள்ளிக்கிழமை மாலையில்  (காலநிலை மற்றும் சீதோஷன நிலைமை மிக சீராக இருக்கும் பட்சத்தில்)  நாட்டில் அநேகமான பகுதிகளில் இருந்து வெலம்பபொட, ஹட்டன் உட்பட  கீழே பதிவு செய்யப்பட்டிருக்கும் வரைபடத்தில் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் பிரகாரம் தலைப்பிறை 45 நிமிடங்களுக்கு மேற்கு தொடுவானில் தரிப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று (03) வியாழக்கிழமை ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் பிறை 29 மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்கும் பிறை மாநாடு நடைபெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவின் தலைவர் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இயங்கும் மதீனதுல் இல்ம் அரபுக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர், மார்க்க சட்டக் கருவூலத்தின் பேராசிரியர், உலகளாவிய மட்டத்தில் அறியப்பட்ட அரபுக் கவிஞர், அல் உஸ்தாத் அல் ஆலிம் எம். பி. எம். ஹிஷாம் (அல் ஃபத்தாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி பிறை மாநாட்டில் நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்ட உப பிறை குழுக்களின் மூலமாக பெறப்பட்ட தகவல்கள் (அதாவது ஒரு தலைப்பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படமுடியாமல் இருப்பதற்கு அடிப்படை காரணிகளாக விளங்கும் அப்பிரதேசங்களின் காலநிலை, சீதோஷன நிலை  தொடுவானத்தில் மேக மூட்டத்தின் நிலை போன்ற தகவல்களை)  அடிப்படையாக வைத்து தலைப்பிறை தென்பட்ட, ஊர்ஜிதம் செய்யப்பட்ட  ஷரீஅத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட சாட்சியங்கள் கிடைக்கப்பெறாமையினால் வியாழக்கிழமை 03/10/2024 மாலை ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வெள்ளிக்கிழமை (04) மாலை ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் முதல் நாள் என தீர்மானம் செய்யப்பட்டது.

அந்த வகையில் இன்று 04/10/2024 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் நேரமாகிய (கொழும்பில் மாலை 6.01 மணிக்கு) சூரியன் மறையும் போது மேற்கு தொடுவானத்தில் சூரியன் மறைந்த இடத்திலிருந்து இடது பக்கம் -11° ( சுமார் ஐந்து விரல் செங்குத்தான இடைவெளியுடன்), தொடுவானத்திலிருந்து 13° உயரத்தில் சந்திரன் தரிப்பட்டிருக்கும்.

சூரியன் மறைந்து சுமாராக 10 நிமிடங்கள் கழிந்தபிறகு 6.11 மணிக்கு சந்திரன் தொடுவானத்திலிருந்து 10° உயரத்தில் 2 மணி – 7 மணி வடிவத்தில் காட்சி தரும்.

அப்பொழுது வெள்ளிக்கிரகம் (VENUS) சந்திரனுக்கு இடது பக்கமாக -6° தொடுவானத்திலிருந்து 23° உயரத்தில் காட்சி தரும்.  (இவை அனைத்தும் ஒரு பிரதேசத்தின் காலநிலை, சீதோஷன நிலைகளின் சீர்த்தன்மை மற்றும் மேகமூட்டம் போன்ற காரணிகள், தலைப்பிறையை பார்ப்பதற்கு தடையில்லாமல் இருக்கவேண்டும் என்பதை வாசகர்கள் கவனத்திற்கு எடுப்பது அவசியமாகும்).

சூரியன் 6.01 மணிக்கு மறைந்ததிலிருந்து சந்திரன் மறைய 61 நிமிடங்கள் எடுக்கும். வெற்றுக்கண்களுக்கு மிக நீண்ட நேரமாக தலைப்பிறை மேற்கு தொடுவானத்தில் தரிபட்டிருப்பதை பொதுமக்கள் அவதானிப்பர்.

பொதுமக்கள், புத்திஜீவிகள் இதனை 2 ஆம் பிறை என்று கணிப்பர். இவ்வாறு இதனை 2 ஆம் பிறை என கணிப்பது, பேசுவது, பிறை மாநாட்டின் தீர்மானங்களுக்கு எதிராக கருத்து எழுதுவது மார்க்கத்தின் வழிகாட்டல்களுக்கு முற்றுமுழுதாக தவறாகும்.

எனவே ஒரு ஹிஜ்ரி மாதத்தின் முதல் நாளில் மேற்கு தொடுவானத்தில் தலைப்பிறை மிக நீண்ட நேரம் தரிப்பட்டிருப்பது மார்க்கத்தின் வழிகாட்டல்களுக்கும், வானியற் தரவுகளுக்கும் முரண்பட்டதல்ல.

அது ஷரீஅத்தின் சட்ட மூலங்களின் வரையறைகளுக்குட்பட்டதாகும் என்பதனை பொது மக்கள், புத்திஜீவிகள் விளங்கிக்கொள்வது அவசியமாகும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...