இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ‛ஹமாஸ்’ அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் கொல்லப்பட்டார்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து தற்போது புதிய தலைவராக யாஹ்யா சின்வார் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று( அக்.,17) ஐ.டி.எப். எனப்படும் இஸ்ரேல் ராணுவப்படையினர் காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் யாஹ்யா சின்வார் மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஹமாஸ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை உயிரிழந்தது யஹ்யா சின்வாராக இருப்பின், இந்த போர் முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஹமாஸ் தலைவரை கொல்வதுதான் இஸ்ரேலின் நோக்கம் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.