போரால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 30 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் பலஸ்தீனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பலமுறை கண்டனம் தெரிவித்தும் காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீதான தாக்குதல் தொடர்ந்தே வருகிறது. இதனால் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையி்ல் மனிதாபிமான அடிப்படையில் 30 தொன் நிவாரணப் பொருட்களை பலஸ்தீனத்துக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இதில்,மருந்துகள், அறுவை சிகிச்சைபொருட்கள், பல் மருத்துவத்துக்கான மருந்துகள், பொது மருத்துவ பொருட்கள் மற்றும் அதிக சத்து கொண்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமை (UNRWA) மூலம் இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.