இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் நிறுவிய கட்டிடம் உள்ளதால் அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலியர்கள் அதிகளவில் அறுகம்பே செல்கின்றனர். அந்த பகுதியே அவர்களின் அதிக விருப்பத்திற்குரிய பகுதியாக காணப்படுகின்றது, அவர்கள் அங்கு நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இந்த பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படுவதால் அச்சுறுத்தல் நிலவுகின்றது என சமீபத்தில் எங்களுக்கும் தகவல்கள் கிடைத்தன.
ஆரம்பகட்ட நடவடிக்கையாக நாங்கள் ஏற்கனவே வீதிதடைகளை அமைத்துள்ளோம், வாகனங்களையும் பொதுமக்களையும் சோதனையிடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம்.
அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்துடன் அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் நிறுவிய கட்டிடம் உள்ளதுடன் இஸ்ரேலியர்கள் அறுகம்பே பகுதிக்கு அடிக்கடி ஈர்க்கப்படுகிறார்கள்.
அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகள் தொடர்பில் 119 இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.