ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது போர் தொடுக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாகவும், நிச்சயம் பதிலடி கொடுக்க ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் தரைப்படை மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து லெபனானுக்கு ஆதரவாக ஏமன் நாட்டிலுள்ள ஹவுத்தி போராளி குழுவினர் இஸ்ரேலுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அந்நாட்டின் முக்கிய வணிக மையங்கள், தலைமையகங்கள் ,துறைமுகங்கள், விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் ஆதரவாக சிரியாவில் இருக்கும் ஷியா போராளி குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக களம் இறங்கின. அவர்களுக்கு சிரிய அதிபர் ஆசாத், ஈரான் ராணுவம் ஆதரவளித்தது.
இதன் காரணமாக லெபனான், காசா, சிரியா ஏமன் ஆகிய நாடுகளோடு இஸ்ரேல் சண்டை போடுவதோடு பலமுனை தாக்குதலை எதிர் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலும் அந்நாடுகள் மீது தாக்குதலை தொடரும் நிலையில் ஹமாஸின் மூத்த தலைவர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அவரது மகள், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இருந்த நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. குறிப்பாக போராளி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிடிக்ஸ் ஏவுகணைகளை வீசியது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என கூறப்படுகிறது. இதற்கான வியூகங்களை அமைக்கும் பணியில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி பயந்து போய் பதுங்கி உள்ளதாக மேற்கத்திய செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களிடையே தோன்றி பேசிய கமேனி, இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்தது சிறிய தண்டனை ஏவுகணை தாக்குதல் தான் எனவும் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் தொடரும் என கூறினார்.
இந்நிலையில் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வழங்கியது.
இதனால் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத்திற்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து பதிலடி கொடுக்க வேண்டும் என கமேனி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாராக இருக்கும் நிலையில் தாக்குதலை தீவிரத்தை பொறுத்து பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஈரானில் பொருட்சேதமோ உயிரிழப்போ ஏற்பட்டால் பதிலுக்கு ஈரான் ராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் எனவும், ராணுவ தளங்களை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடத்தினால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என ஈரானைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.