இந்தியாவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களில் ஒருவரான பாபா சித்திக் சனிக்கிழமையன்று (12) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் லாரன்ஸ் பிஷ்னோயின் குண்டர் கும்பலுக்குத் தொடர்பிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய், திஹார் சிறையில் தனக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
மும்மையின் பேண்ட்ரா வட்டாரத்தில் திரு பாபா சித்திக் மகனின் அலுவலகத்துக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் அவரை மூவர் சுட்டுக் கொன்றனர். திரு பாபா சித்திக்கின் மகன் ஸீஷான், சட்டசபை உறுப்பினராக உள்ளார்.
சித்திக், தனது வாகனத்துக்குள் ஏறும்போது கால்நடையாக அவ்வழியே வந்த மூவர் அவரைப் பலமுறை சுட்டனர். நெஞ்சில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கு ஆளான அவர், இறந்துவிட்டதாக தங்களிடம் கொண்டு வரப்பட்டவுடன் உறுதிப்படுத்தியதாக லீலாவதி மருத்துவமனை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்தது.
சம்பவத்தில் சித்திக்கைத் தவிர வேறு யாரும் காயமடையவில்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
பாபா சித்திக் தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் மாணவரணியில் சேர்ந்தார். பின்னர் இளைஞரணியில் இணைந்து பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து 1999ல் முதல்முறை பந்த்ரா மேற்கு தொகுதி எம்.எல்.ஏவானார். மூன்று முறை எம்.எல்.ஏ, அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். 2000 – 2004 காலகட்டத்தில் உணவு மற்றும் சிவில் விநியோகத் துறை அமைச்சராக இருந்தார்.